பக்கம் எண் :

வீராட்டகாசப் படலம்207

(இ - ள்.) ஆன்மதத்துவம், வித்தியாதத்துவம், சிவதத்துவ மென்னும் முறையாகக் காணப்பெற்ற முப்பத்தறுவகைத் தத்துவங்களாகிய படிகள் பக்கத்தே பொருந்தச் செய்வித்த பசும்பொன்னினாகிய அணையாகிய விடத்தில் அழகிய வளையலை யணிந்த உமையம்மையாருக்குப் பக்கலில் குமரக்கடவுள் வேறொருவர்க்கில்லாத சிறப்புடனெழுந்தருளியிருப்பச் சிவபெருமானு மங்ஙனமே வீற்றிருந்தனன் முன்னொரு காலத்து.

(வி - ம்.) ஆறிரு மூன்று - ஆறாறு முப்பத்தாறென்க. சோபானம்-படி; "பெருகு தத்துவங்களென்னும் பெரிய சோபானமேறி" என்னும் பெரியபுராணச் செய்யுளா னறிக. பால்துதைய - பக்கத்தே பொருந்த. சுவாமிக்கு மம்பிகைக்கு மிடையில் குமரக்கடவு ளிருந்தன ரென்க.

(4)

 அத்தகு செவ்விய றிந்துவி னைச்சம மாய்க்கன்மம்
 ஒத்தத வத்தினன் முத்தியை வேட்டவு ளத்தானாப்
 பித்தினன் சந்திர காசனெ னப்பெயர் பூண்டுள்ளோன்
 மெய்த்தக ணங்களுண் மிக்கவ னாங்கண்வி ரைந்துற்றான்.

(இ - ள்.) அத்தன்மைத்தாகிய காலத்தினை யறிந்து இருவினையின்கண்ணும் சமமாகிய அறிவுடைமையால் நல்வினை தீவினையாகிய இருகன்மங்களும் சமமாகப் பொருந்தப்பெற்ற தவத்தினை யுடையனாய் முத்தியை விரும்பிய வுள்ளத்தின்கண் அமையாத பத்தியாய பித்தினையுடையானாய்ச் சந்திரகாசனென்னும் பெயரை மேற்கொண்டுள்ளவன் உண்மையோடு கூடிய சிவகணங்களுள் மேலானவன் அவ்விடத்து விரைந்து சென்றான்.

(வி - ம்.) செவ்வி - காலம். வினைச்சமமாயெனவும் கன்மமொத்த எனவும் இருகாற் கூறுதலின் முன்னது உயரறிவின்கண் ணிகழ்வதெனவும் பின்னது கன்மத்தின்கண் நிகழ்வதெனவும் கொள்க. முத்தியை வேட்டவுளத்தானாப் பித்தினன் - முத்தியை விரும்பிய உள்ளமுடைமையாற் பித்தானவன். அவ்வன்பு பித்து போறலிற் பித்தென்றார். இதனை "பித்துப்பத் தரினத்தாய்" எனவரும் சிவஞான போத வுதாரண வெண்பாவடியானும் அதன் உரையானு முணர்க.

(5)

 எட்டினு மைந்தினு மெய்தவ ணங்கியெ ழுந்தூறி
 உட்டிளை யார்வமு ருக்கவெ யிற்கணு றும்வெண்ணெய்
 பட்டதை யென்னநெ கிழ்ந்துவி ழிப்பனி நீர்வார
 மொட்டுறு கஞ்சமெ னக்கைசி ரத்துமு கிழ்த்தோதும்.

(இ - ள்.) எட்டங்கத்தானும் ஐந்தங்கத்தானும் பொருந்த வணக்கஞ்செய்து எழுந்துநின்று பெருகியுள்ளே யநுபவிக்கின்ற அன்பான துருகச் செய்ய வெயிலின்கட்பட்ட வெண்ணெ யுருகியதைப்போல நெகிழ்ச்சியுற்றுக் கண்களிற் குளிர்ந்த ஆநந்தவெள்ள மொழுகக் குவிந்த தாமரை மலரென்று சொல்லும்வண்ணம் கரங்களைச் சிரத்துக் கூப்பி விண்ணப்பஞ் செய்வான்.

(வி - ம்.) எட்டு - அட்டாங்கம். ஐந்து - பஞ்சாங்கம். இவை முறையே சிரம், கரம், கன்னம், புயமிரண்டு, உதரம் இவை பூமியிற்படியும்படி