பக்கம் எண் :

208தணிகைப் புராணம்

செய்வனவும், சிரம், கரம், புயம் முதலியன பூமியிற் படியும்படி செய்வனவு மாகும். மொட்டு - அரும்பு. பட்டதை என்பதில் ஐ : சாரியை.

(6)

வேறு

 வெளியூ டுவிரா யவளிச் சலமவ்
           வெளிசற் றும்விரா வுதலின் றதுபோல்
 விளியா துவிரா யவுயிர்த் தொகுதி
           விரவும் வினையின் பயனே துமுறா
 ஒளியே யுலகெங் குநிறைந் துணர்வுக்
           குணர்வா கியவின் பநெடுங் கடலே
 தெளிமா தவருள் ளகம்விள் ளரிய
           தேக்கா ரமுதே சரணஞ் சரணம்.

(இ - ள்.) ஆகாயத்தோடு கலந்த காற்றினதியக்கத்தை யவ்வாகாயம் சிறிதும் கலத்தலின்று; அதுபோலக் கெடாது (சிவமாகிய தன்னோடு) கலந்த உயிர்க் கூட்டங்களின்மாட்டுக் கலந்த நல்வினை தீவினைப் பயன்கள் சிறிதும் தன்னைப் பற்றாத ஒளிவடிவாக வுள்ளவனே! உலகெங்கணும் வியாபித்து அறிவுக்கறிவாகிய பேரின்பக் கடல்போல் பவனே ! (நித்திய மிஃது அநித்திய மிஃதென நூன்முறையானே) தெளிந்த பெரிய தவத்தினையுடைய ஞானிகள் அகத்துணின்றும் நீங்குதலில்லாத நிறைந்த அரிய தேவாமுதம் போன்றவனே! நினதாள்கள் எளியேனுக் கரணமாகும்.

(வி - ம்.) வெளி - ஆகாயம். வளிச்சலம் - காற்றினியக்கம். சற்றும் - சிறிதும். விளியாது - கெடாது. தொகுதி - கூட்டம். வினையின்பயன் - நல்வினை தீவினைப்பயன்கள். ஏதும் - சிறிதும். விள்ளரிய - நீங்குதலரிய. தேக்குதல் - நிறைதல். சரண் - திருவடி. சரண் - புகலிடம். இதனை "பன்மாண்.......சரண்சென்று தொக்க" என்னும் சிந்தாமணி, தன்மசரணம் சாதுசரணம் கூறிய செய்யுளானறிக.

(7)

 அருவென் றுருவென் றருவோ டுருவென்
           றறையும் மலபே தமுமா யவைமற்
 றொருவும் பொருளா யபரா பரனே
           யுடனின் றுயிரைத் தொழிலிற் புகுவித்
 திருளும் வினைமாய் வினெழுந் தொறுமங்
           கெய்யா மையருத் துமருட் செறிவே
 தெருளும் புலனில் லவரெய் தரிய
           தேக்கா ரமுதே சரணஞ் சரணம்.

(இ - ள்.) அருவமென்றும் உருவமென்றும் அருவுருவமென்றும் சொல்லப் பெறுகின்ற நவவித பேதமாகி அந்நவவித பேதங்களையும்