பக்கம் எண் :

210தணிகைப் புராணம்

"அவையாய் மிடையா....உயர்த்தருள்வித்தருள் வித்தகனே" என்றார். வாட்டு - (உயிர்களை) வருத்துகின்ற. உடற்பொறை - உடற்பாரம். விண்மணி - சூரியன். சேடு - பெருமை. "சேட்டிளங்கிளிக் குலங்களத்தெரிவை மாரோப்பும், பாட்டிசைத் திறமொளியிருந் தனுதினம் பயிலும்" என்னும் காஞ்சிப்புராணச் செய்யுளடி
யானுணர்க.

(9)

 மட்டார் குழன்மங் கையிடம் பிரியா
           வரதா மதனா சகரா சரணம்
 ஒட்டா தபுலிக் கலையோ டுதிசை
           யுடையாய் பலவும் முடையாய் சரணம்
 தொட்டா தவர்வாட் கணுகுத் தெயிறு
           தொலைவித் தபவித் திரனே சரணம்
 கட்டார் தருகொன் றைமணங் கமழுங்
           கயிலைக் கிரியாய் சரணஞ் சரணம்.

(இ - ள்.) தேன் பொருந்திய மலர்களையுடைய கூந்தலோடு கூடிய உமையம்மையாரை இடப்பாகத்தினின்றும் நீங்காத மேலானவனே! மன்மதனை நாசஞ் செய்பவனே! தேவனே! எளியேற்குப் பற்றுக் கோடாம். நினது பெருமைக்குச் சிறிதும் ஏலாத புலியின் தோலாகிய ஆடையுடனே திசைகளினையு மாடையாக வுடையவனே! (இயங்கியற் பொருள், நிலையியற் பொருளாகிய) பலவற்றையு முடைமைப் பொருளாக வுடையவனே! நீயே எளியேனுக்குப் பற்றுக்கோடு. பகன், பூஷன் என்னும் சூரியர்களின் கண்ணைத் தோண்டிப் பல்லை யுகச்செய்து தொலைவித்த பரிசுத்தமானவனே! நீயே எனக்குப் பற்றுக்கோடு. தேனோடு கூடிய கொன்றைமலர் வெளியிடுகின்ற வாசனை வீசுகின்ற கைலைமலையினையுடையாய்! நினதாள்களே எளியேனுக்குப் புகலிடமாகும்.

(வி - ம்.) மட்டு - தேன். "மட்டென்பதெல்லை கள்ளாம்" என்னும் நிகண்டானறிக. ஒட்டாத - பொருந்தாத. கலை - ஆடை. திசையுடை - திக்காடை. பலவும் - நிலையியற் பொருள், இயங்கியற்பொருள். தொட்டு - தோண்டி. "கண்டொட்டுண்டு கவையடிபெயர்த்து" என்னும் மணிமேகலை யடியானுணர்க. ஆதவர் - பகன், பூஷன். "உண்ணப் புகுந்த பகனொளித் தோடாமே, கண்ணைப் பறித்தவாறுந்தீபற" "சூரியனார் தொண்டைவாயினிற்பற்களை, வாரிநெறித்தவா றுந்தீபற." என்னும் திருவாசகச் செய்யுளானறிக. பவித்திரம் - புனிதம். தார் - பூ. " தாருவரிக்கடை பண்பாடும் வேதத் தலத்திறை" என்னும் மறைசையந்தாதியடி யானுணர்க. தார் - மாலை யெனினுமாம்.

(10)

 அந்திப் பிறைசூ டியசெஞ் சடிலத்
           தழகா குழகா சரணஞ் சரணம்
 சந்தப் புரமூன் றுமொருங் கவியச்
           சமரா டமரா சரணஞ் சரணம்