பக்கம் எண் :

வீராட்டகாசப் படலம்211

 பந்தப் படுமென் னையெடுத் தருளும்
           பவனே சிவனே சரணஞ் சரணம்
 கந்தப் பொழில்சூழ்ந் துவளங் கதுவுங்
           கயிலைக் கிரியாய் சரணஞ் சரணம்.

(இ - ள்.) மாலைக்காலத்தே தோற்றுகின்ற பிறைச்சந்திரனைத் தரித்த சிவந்த சடாபாரத்தினையுடைய பேரழகுடையவனே ! குழகனென்னுந் திருநாமத்தை யுடையவனே ! நினதாள்கள் எளியேனுக்குப் பற்றுக்கோடாம். அழகிய புரங்கள் மூன்றுமொரு சேரக்கெடப் (நெற்றிக்கண்ணாற்) போரினைச் செய்த மரணமில்லாதவனே ! நினதாள்கள் எளியேனுக்குப் பற்றுக்கோடாகும். (அநாதியிலே யாணவ மலத்தாற்) கட்டுப்பட்ட எளியேனை (கருணைக்கையா) லெடுத்து அருளினைச் செய்கின்ற எல்லாவற்றையு மூடுருவி நிற்பவனே ! சிவனென்னுந் திருநாமத்தை யுடையவனே ! நினதாள்கள் எளியேனுக்குப் புகலிடமாகும். வாசனையுடனே கூடிய சோலைகள் சூழப்பெற்ற கைலைமலையை யிருப்பிடமாகக் கொண்டவனே ! நினதாள்கள் எளியேனுக்குப் பற்றுக் கோடாகும்.

(வி - ம்.) பவன் - இஃதிறைவன் திருநாமங்கள் பலவற்றினும் சிறந்தது; எல்லாவற்றையு மூடுருவி நிற்பதென்பதிதன் பொருள்; இதனை "சிவனெனும் நாமந் தனக்கே யுடைய செம்மேனி........பவனெனும் நாமம் பிடித்துத் திரிந்தால்" எனவரும் நாவரசர் திருவாக்கானறிக.

(11)

 சொல்லார் பொருளே சரணஞ் சரணஞ்
           சுடருட் சுடரே சரணஞ் சரணம்
 ஒல்லா ரிருளே சரணஞ் சரணம்
           உற்றோ ரொளியே சரணஞ் சரணம்
 வெல்லா வயவா சரணஞ் சரணம்
           விடையா விடையா சரணஞ் சரணம்
 கல்லா லமர்வாய் சரணஞ் சரணங்
           கயிலைக் கிரியாய் சரணஞ் சரணம்.

(இ - ள்.) சொற்களினிடத்துப் பொருந்திய பொருள் வடிவானவனே! நினதாள்கள் எளியேனுக்குப் புகலிடம். ஒளிகளுள் வைத்தொளி வடிவமானவனே! நினதாள்கள் எளியேனுக்குப் புகலிடம். (தம்மன்பரல்லாத) ஏனையோர்க்கு இருள்வடிவமானவனே! நினதாள்கள் எளியேனுக்குப் புகலிடமாகும். (தம்மன்பராக) வந்தடைந்தோர்க்கு ஒளி வடிவமானவனே! நினதாள்கள் எளியேனுக்குப் புகலிடமாம். பகைவரால் வெல்ல முடியாத வீரனே நினதாள்கள் எளியேனுக்குப் புகலிடம். விரோதமில்லாத இடபவாகனத்தை யுடையவனே! நினதாள்கள் எளியேனுக்குப் புகலிடம். கல்லாலமரத்தின் கீழ்த் தென்முகத் தெய்வமாகத் தங்கியவனே! நினதாள்கள் எளியேனுக்குப் புகலிடமாகும். கைலைமலையின்க ணெழுந்தருளியிருப்பவனே! நினதாள்கள் எளியேனுக்குப் புகலிடம்.