பக்கம் எண் :

212தணிகைப் புராணம்

(வி - ம்.) ஒல்லார் - அன்பரல்லாத ஏனையோர். உற்றார் - அன்பர்கள். அன்பரல்லாத ஏனையோரா லிறைவ னிலையுணரப்படாமையின் "ஒல்லாரிருளே" என்றார். தம்மடியடைந்த அன்பினர் தன்னிலையுணர்ந் தின்புறலின் "உற்றாரொளியே" என்றார். இறைவனை யொப்பாருமிக்காரு மின்மையான் ஒருவரும் செருச் செய்து வெல்ல வியலாதென்பார் "வெல்லா வயவா" என்றார். வயவன் - வீரன். விடையா - விரோதம் கொள்ளாத; ஈறுகெட்ட பெயரெச்சம்.

(12)

வேறு

 என்று தோத்திரமி யம்பிய விருந்த வன்முகம்
 நன்று நோக்கிவிழை வென்னது நவிற்று கெனலும்
 கொன்றை மாலிகை மிலைத்தசடி லக்கு ழகனார்
 வென்ற பாதமலர் மீட்டுமுடி கோட்டி மொழிவான்.

(இ - ள்.) இங்ஙனம் துதிசெய்த பெரிய தவத்தினையுடைய சந்திர காசனென்னும் கணத்தலைவன் முகத்தைப் பெரிதும் பார்த்து (நின்) விருப்பம் யாது அதனைச் சொல்வாயென்று திருவாய்மலர்ந்தருளக் கொன்றை மாலையணிந்த சடையினையுடைய சிவபெருமானது மேம்பட்ட பாததாமரையினிடத்துப் பின்னரும் முடியை வணக்கி விண்ணப்பம் செய்வான்.

(வி - ம்.) நவிற்றுக -விகாரம். வென்ற - மேற்பட்ட. இனி, இயமன் முதலியோரை வென்ற எனினுமாம். ஆன்மாக்களின் ஆணவமலத்தினைக் கடிந்து தன்பாற் கலக்கச் செய்தலின் "வென்ற பாதமலர்" என்றார்.

(13)

 வேத மாதிபல வும்பொருள் விளக்கி யிருளின்
 ஏத மோதியெனை யின்னருளி னாண்ட ருளினை
 ஆத லாலடைவ தின்றுகுறை யாதி மறைமுன்
 ஓது கின்றமொழி யின்பொருளு றாமை யலதே.

(இ - ள்.) வேத முதலாகிய கலைகளின் பல பொருளையும் விளக்குதலைச் செய்து, ஆணவ மலமாகிய இருளினான் வரும் குற்ற மிற்றெனத் திருவாய்மலர்ந்தருளி யெளியேனை இனிய (கைம்மாறில்லாத) கருணையான் ஆண்டருளினை. ஆகலான் முதன்மையாகிய வேதத்தினுக்கு முன்னர் ஓதப்படுகின்ற பிரணவமென்னு மொழியின் பொருளினை யடையாமையாகிய குறையல்லது வேறு குறை யடைவதில்லையாகும்.

(வி - ம்.) இருள்-ஆணவமலம். குறையடைவதின்று என மாற்றுக.

(14)

 மும்ம தக்கலுழி வண்டுதிறை கொள்ள முடுகுங்
 கைம்ம லைக்கடவுள் போலமகன் மைக்க ணிறுவிச்
 செம்ம னல்கினையெ னக்கிதுதெ ளித்த ருளுதற்
 கம்ம வையமிலை யென்றுனரு ளால ணவினேன்.