பக்கம் எண் :

214தணிகைப் புராணம்

தெழுத்து மொழியொன்றென வழங்கி வருமால்" என்றனர். தொகுத்து -
சுருக்கி.

(17)

 எண்ணில் பல்பவ மிருந்தவமு ழந்த பயனால்
 நண்ணொ ணாதநவை யில்பொருளு ணர்ந்து பெரிதும்
 உண்ண யந்துகண நாதனுவ கைக்க டலினான்
 அண்ணல் கூறினவ கஞ்செவியி னார்த லொடுமே.

(இ - ள்.) பெருமையிற் சிறந்த இறைவன் திருவாய் மலர்ந்தருளினவாகிய பொருள்கள் செவியகத்திற் சேர்ந்த அளவில் அளவிட முடியாத பல பிறவிகளினும் பெரிய தவங்களைச் செய்த பயனால் யாவருக்கு மணுகவொண்ணாத குற்றம் நீங்கிய செம்பொருளினை யுணர்ந்து உள்ளே விரும்பிக் கணநாதனாகிய சந்திரகாசன் என்பவன் ஆனந்தமாகிய கடலின்கண்ணே மூழ்கினான்.

(வி - ம்.) ஆர்தலோடும் - சார்ந்த அளவில். இதனைக் "கானத்தினேகு கின்றான் கடிபொழிற் கவின்கண் டெய்தித், தானத்திலிருத்த லோடும்" என்னும் சிந்தாமணிப் (11) பாடலுரையின்கண் இவ்வாறு ஆசிரியர் நச்சினார்க்கினியர் பொருள் கோடலைக் காண்க. செவியகமென மாற்றுக.

(18)

 ஞான சத்தியுரு வாதலி னலத்த குமரன்
 ஆன ளித்தபொரு ளன்றியத னுட்பொ ருளெலாம்
 தான றிந்தறிக லானென விருந்த னனரோ
 போன தப்பொழுது பின்னரொரு போது முருகன்.

(இ - ள்.) நன்மையே திருமேனியாகக்கொண்ட முருகப்பெருமான் ஞானசத்தி வடிவினனாதலின் அவ்விடத்திற் (பிரணவத்திற்குச்) சொல்லிய பொருளல்லாமலும் (அம்மந்திரத்தி)னுட் கிடையாகிய எல்லாப் பொருளையும் தானறிந்துவைத்து மறியாதவன்போல இருந்தனன். அக்காலம் சென்றது. பின்னரொரு காலத்து அம்முருகப்பெருமான்.

(வி - ம்.) ஆன் - அவ்விடம்.

(19)

 தந்தை தாய்புடைய கன்றுகயி லைத்த டவரை
 அந்தில் வைகலுறு மந்திரமி ருந்த ருளுநாள்
 எந்த வானவரு மிந்திரனு மாலு முமைசேர்
 உந்தன் வார்கழலி றைஞ்சவவ ணெய்த லுறுவார்.

(இ - ள்.) தந்தை தாயர் பக்கலினின்றும் நீங்கிப் பெருமையோடு கூடிய +கைலைமலையாகிய அவ்விடத்திற் பொருந்தும் திருக்கோவிலின் கண் எழுந்தருளியிருக்கும் காலத்து எவ்வகைப்பட்ட தகுதியையுடைய தேவர்களும், இந்திரனும், விண்டுவும், உமையம்மையார் பொருந்தப் பெற்ற சிவபெருமான் நீண்ட திருவடியை வணங்க அக்கயிலைக்கட் பொருந்துகின்றவர்கள்.

(வி - ம்.) மந்திரம் - கோவில். தன்னென்ற தீண்டுச் சிவம். உறுவார் - ஈண்டுப் பொருந்துகின்றவர்கள்.

(20)