பக்கம் எண் :

வீராட்டகாசப் படலம்217

மூன்றுலகத்தின் கண்ணுள்ளவர்களும், முன் வணங்குதலைக் கண்டு வைத்தும் அறிவு செம்மை நிலையடையப் பெற்றானிலன். தன்னை வருத்த வருகின்ற தீயவினை வருதற்குக் கைதட்டியழைக்கின்றனன். விரைவாக அவனை எதிரே கொணர்ந்து விடுவாயாக.

(வி - ம்.) ஏதும் - சிறிதும். இயம்புமறை யென்பதற்கு அவன் நாடோறுமோதுகின்ற வேதமெனினுமாம். தீவினையினை வேற்றுமை மயக்கம். பிணிக்குமருந் தென்றாற்போலக் கொள்க. கொம்மை கொட்டல் - தட்டி யழைத்தல். "நோற்றிலர் மகளி ரென்பார் நோங் கண்டீர்தோள்க ளென்பார். கூற்றத்தைக் கொம்மை கொட்டிக் குலத்தொடு முடியு மென்பார்." என்னும் சிந்தாமணி (குணமாலை - 259) செய்யுளானு மதனுரையானு முணர்க.

(26)

 என்றி டிக்குலமு லம்பியதெ னக்க டவலும்
 நன்று நன்றெனவ ணங்கினன டத்த லதுகண்
 டன்று டங்குபடர் தேவர்முனி வோர னைவரும்
 மன்ற நீத்துயிரை வெற்றுடல ராகி மருளா.

(இ - ள்.) என்றிவ்வா றிடிக்கூட்டங்கள் முழங்கினாற்போலத் திருவாய் மலர்ந்தருள வீரவாகுதேவர் நல்லது நல்லதென்று வணங்கி நடத்தலாகிய அதனைக் கண்ணுற்று அஞ்ஞான்று பிரமனுடன் செல்கின்ற தேவர்கள் முனிவர்கள் யாவரும் தங்களுயிரினைத் தேற்றமாக நீக்கி வெற்றுடம்பினராகி மயங்கி.

(வி - ம்.) உலம்பியதென - முழங்கினாற்போல. உடங்கு - கூட. படர் - செல்கின்ற. மன்ற - தேற்றமாக.

(27)

 மைந்தன் றந்தையையி கந்துமுன மாய்ந்த னமெலாம்
 தந்தை மைந்தனையி கந்துவரு தண்ட மொருவி
 உய்ந்து போவதுள தாங்கொலென வாயி னுரையார்
 சிந்தை யாலுணர நோக்கினர்சி தர்ந்து பெயர்வார்.

(இ - ள்.) முன்னர், இப் பிரமபுத்திரனாகிய தக்கன் (இம் முருகப் பெருமான்) றந்தையாகிய சிவபெருமானை (அவமதித்து) நீங்கலான் (நேர்ந்தனவாகிய துன்பங்கள்) எல்லாவற்றையும் யாமெல்லோரு மறிந்துள்ளோம். அத் தக்கன் றந்தையாகிய இப் பிரமன் (அச் சிவ பெருமான்) திருக்குமாரராகிய முருகக் கடவுளை (அவமதித்து) நீங்கலான் வருகின்ற தண்டத்தினின்றும் நீங்கிப் பிழைத்துப்போத லுளவாகும் கொல்லோ? என வாயினா னுரையாராகி மனத்தா னுணரும் வண்ணம் பிரமனை நோக்கினவராகிச் சிதறிப் பலதிக்கினும் சென்றனர்.

(வி - ம்.) மைந்தன் - பிரமபுத்திரனாகிய தக்கன். தந்தை - சிவ பெருமான். மைந்தன் - சிவபெருமான் புத்திரராகிய முருகக் கடவுள். இகந்தென்னும் செய்தெனெச்சங்கள் ஈரிடத்தும் காரணப் பொருளில் வந்தன.

(28)

 அங்கி காலுமட லாழியிது போது மிகவின்
 தங்கு மேயெனவ யர்ந்துதனி மாயன் மறையச்