பக்கம் எண் :

வீராட்டகாசப் படலம்219

 மற்றை வானவர்கண் மாதவர்கள் யாரு மறிவின்
 முற்று நின்னடிமை யென்றுமுறை தாழ்ந்து யிரையாம்
 பெற்று மீடுமென வோடவொளி பில்கு மவுலிக்
 கொற்ற வீரனயன் முன்கைபிடி கொண்ட ணவினான்.

(இ - ள்.) அயனை யொழிந்த ஏனைய தேவர்களும், மாதவர் முதலிய யாவரும் அறிவினான் முதிர்ந்த தேவரீருடைய அடிமைகளென்று கூறி முறையாக வணங்கி உயிரினைப்பெற்றுப் (பெண்டு பிள்ளைகள் முகத்தில் விழிக்க) மீளுவோமென ஓடாநிற்க, ஒளிவீசுகின்ற முடியோடுகூடிய வெற்றி பொருந்திய வீரவாகுதேவர் பிரமனது முன் கையைப் பிடித்துக்கொண்டு குமரக்கடவுள் முன்னர்ப் பொருந்தினான்.

(வி - ம்.) யாரும் - யாவரும். அறிவின் முற்றும் - அறிவானிறைந்த. மீடுமென - மீள்வோமென்று. பில்குதல் - துளித்தல்; வீசுதல் - இலக்கணை.

(32)

வேறு

 வேத நான்முகன் மேவி நிற்றலும்
 கோதை வேல்வலங் கொண்ட கொற்றவன்
 போதின் மேயினோய் புவன மாக்குவோய்
 யாதின் மிக்குளை யியம்பு கென்றனன்.

(இ - ள்.) வேதத்தினை யுணர்ந்த நான்முகத்தோடு கூடிய பிரமன் பொருந்தி நிற்க மாலையை யணிந்த வேற்படையினை வலப்பக்கத்துக் கொண்ட வெற்றியையுடைய முருகப்பெருமான் தாமரைப்பூவை யிடமாகக் கொண்டவனே! உலகங்களைப் படைப்போய்! எச்செய்கையி னுயர்ந்தாய் சொல்லுக வென்றனன்.

(வி - ம்.) "போதின்மேயினோய்" "புவனமாக்குவோய்" என்பன இழிவின்கண் வந்த குறிப்புமொழி. நிற்றலுமென்பது எச்சத்திரிபு. இயம்புக என்றனன் என்பது விகாரம்.

(33)

 முனிவ னின்னண முதல்வன் கூறலும்
 தனிதி னின்றவச் சதுமு கத்தவன்
 பனியு ளத்தினான் பகர்த லொன்றிலான்
 புனிதன் மேலிது புகறன் மேயினான்.

(இ - ள்.) முதல்வன் சீற்றத்தாலிவ்வாறு கூறத் தனித்து நின்ற அந்நான்முகங்களோடு கூடிய பிரமன் நடுக்கங்கொண்ட வுள்ளத்தினை யுடையவனாய்ச் சொல்லுதற்கொரு மாற்றமுமிலனாயினன். தூய்மை பொருந்திய முருகப்பெருமான் மேலிதனைச் சொல்லத் தொடங்கினான்.

(வி - ம்.) தனித்து என்பது தனிதின்னென விகாரப்பட்டு நின்றது. "இனிதி னிங்ஙன மேத்தி வலங்கொடு - முனிவர் சித்திர கூட முனாதெனாத்- தனிதினேகுபு தாபதர் வாழ்வதோர் - பனிகொள்பூம்பொழிற்பள்ளி கொண் டானரோ" என்னும் சிந்தாமணி (கேமசரி. 10) செய்யுளானும், தனித்து விகாரம், இன் : அசை எனவரு மதனுரையானுமுணர்க.

(34)