பக்கம் எண் :

226தணிகைப் புராணம்

 கறுவு கொண்டிடி னுலகெலாங் கவிழ்த்தருள் கொள்ளின்
 நிறுவு மாற்றன்மா தவர்நெடுந் தேவர்யா வரையும்
 பெறுதல் வல்லயான் பீழையிற் பிணையுமா செய்தோன்
 சிறுவ னேயென நினைதொறுந் தெருமரா நின்றான்.

(இ - ள்.) சினங்கொள்ளி னுலகங்களை யெல்லாந் தலைகீழாம்படி செய்து அருளைக் கொள்ளி னவ்வுலகங்களை (மீள நின்றநிலையில்) நிறுவவல்ல ஆற்றலையுடைய பெரிய தவத்தினரையும், தேவர்களையும் படைத்தலில் வன்மை பெற்ற யான் துன்பத்திற் கலக்குமாறு செய்தவன் இளையோனே யாவானென்று நினையுந்தோறும் சுழலாநின்றான்.

(வி - ம்.) கறுவு - கோபம். கவிழ்த்தல் - ஈண்டு அழித்தல். நிறுவும் - படைக்கும். பீழை - துன்பம். பிணையுமா - கலக்குமாறு; ஈறுதொக்கது. தெருமரல் - சுழலல்.

(53)

 தன்னின் மேம்படு மாற்றலர்ப் பிழைப்பது தகாதால்
 அன்னர் தம்மின்மேம் பட்டவ ரருண்மிகுந் துழியும்
 கன்னி பாகனார் பேரருட் கடலினிற் றிளைத்து
 முன்னி னேற்கிங்க ணிதுவந்து முடிதலி னென்பான்.

(இ - ள்.) உமையம்மையாரைப் பாதிப் பாகத்திலுடைய சிவ பெருமானது பெரிய அருளாகிய கடலின்கண் மூழ்கி அடைந்த எனக்கு அவ்விடத்து இச் சிறைவாசம்வந்து பொருந்துதலினால் தன்னைக் காட்டிலும் அறிவாற்றல் செயல்களான் மேம்பாடுற்ற பகைவரை அவரைக் காட்டிலும் மேன்மையுற்றவர் அருள் ஒருவனுக்கு மிகுந்திருந்த காலத்தும் நொதுமலராய் விலகிச் செல்லுதல் அடாது எனச் சொல்வானாயினான்.

(வி - ம்.) முன்னுதல் - அடைதல். இது - இச்சிறை.

(54)

 போது தவ்வெனக் கேண்மையர் தவ்வெனப் புல்லும்
 மாதர் தவ்வென மைந்தர்க டவ்வென வானில்
 கோதில் சத்திய வுலகந்தவ் வெனவென்றன் கொள்கை
 யாதுந் தவ்வென விறுத்தவூழ் நன்றென இனைவான்.

(இ - ள்.) யான் தங்கியிருக்கும் தாமரைமலர் பொலிவழிய, என் சுற்றத்தார் பொலிவழிய, யான் புல்லுதற்குரிய பெண்கள் பொலிவழியப், புதல்வர்கள் பொலிவழிய, ஆகாயத்தின்கண்ணுள்ள குற்றமிலதாகிய சத்திய உலகம் பொலிவழிய, எனது கொள்கை யனைத்தும் பொலிவழியத் தங்கிய ஊழ் பெரிதாகுமென்று வருந்துவான்.

(வி - ம்.) தவ்வெனல் - பொலிவழிதல். "கவ்வையாற் கவ்விது காம மதுவின்றேற், றவ்வென்னுந் தன்மை யிழந்து" எனவரும் (1144) திருக்குறளானும், "நூல்கால் யாத்த மாலை வெண்குடை, தவ்வென்றசைஇத் தாழ்துளி மறைப்ப" என்னும் நெடுநல்வாடை (184, 185) அடிகளானுமறிக. யாதும் - எதுவும். இறுத்த - தங்கிய. நன்று - பெரிது.

(55)