| | பெருமை தக்கபிற் சிறுமைவந் தடுப்பினப் பிறப்பை | | | வருபி றப்பினு ளொன்றென வைக்கவும் படுமே | | | ஒருசி ரம்பிரா னுண்கல னாக்குநாட் செல்லல் | | | முருக னுய்த்ததற் கிடும்பிரை யெனமுன்னிக் கரைவான். |
(இ - ள்.) பெருமை தக்கிருக்கப் பின்னர் (தன் நிலைமைக்குச் சிறிது மேலாத) சிறுமை வந்துசேரின் அப்பிறப்பினை வந்த பிறவிகளுள் ஒரு பிறப்பாகவைத் தெண்ணப்படுமோ ? படாதென்க. ஒருசிரத்தினை எம்பெருமா னுண்கலமாகக் கொண்ட நாளினுளவாகிய துன்பம், முருகனாற் றரப்பட்ட துன்பமாகிய பாலினுக்குப் பிரைத்துளியாகுமென நினைத்து உருகுவா னாயினன். (வி - ம்.) செல்லல் - துன்பம். எழுவாய். இஃதேகதேச வுருவகம். தலைகிள்ளிய துன்பம் பிரை. முருகனுய்த்த துன்பம் - பால். (56) | | நெடிய மாயனுந் தலையொன்று நிலத்திடை வீழ்த்து | | | முடிவு பெற்றனன் பன்முறை யிளிவர முயன்றான் | | | கொடிய பால்வினை போல்வதூஉ மெவர்தமைக் குறுகா | | | தொடிதல் பெற்றதென் றூழுடை வலியையு நினைப்பான். |
(இ - ள்.) நெடுமாலும், ஒருதலையானது நிலத்தின்கண் வீழப் பெற்று இறுதியெய்தினன். பலமுறை யாவரும் இளிக்கத்தக்க செயல்களுளவாக முயற்சி செய்துள்ளான். தீயவூழாகிய வினைகள் எவரையடையாது நீங்குதல் உற்றதென்று கருதி ஊழின் வல்லமையையும் நினைப்பா னாயினான். (வி - ம்.) விண்டுவின்றலை நிலத்திடை வீழ்ந்து முடிபெற்றதைக் காஞ்சிப்புராணம் வன்மீகநாதப் படலத்தானறிக. இனி தக்கன் யாகத்தின் மான் வடிவு கொண்டுசெல்ல அஞ்ஞான்று விண்டு தலையிழந்து வீழ்ந்தானெனவும் கூறுவர். போல்வதூஉம் என்பது போலி. இதனை "ஒப்பில் போலியு மப்பொருட் டாகும்" என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்தானு மதனுரையானும், "நெருப்பழற் சேர்ந்தக்கா னெய்போல் வதூஉம்" என்னும் நாலடி (124) செய்யுளானுமறிக. பால் - ஊழ். (57) | | கற்றல் கேள்விநன் றுடையவர் தமக்குமூழ்க் கலக்க | | | முற்று மேல்வையி லதன்பய னறிவுமுற் றாமல் | | | செற்று றுத்துமீ சன்றொழிற் றிறத்தையுஞ் சிந்தித் | | | தற்ற முற்றவ னாற்றவே துவுஞ்சிறி தறிந்தான். |
(இ - ள்.) கல்வி, கேள்வி பெரிது முடையார்க்கும் ஊழானது வருத்துதலைச் செய்ய வந்தடைந்த காலத்தில் அவ்வூழின் பயனை அறிவான தடையாவண்ணம் அப்பயனைத் தடுத்து அவ்வூழை வலியுறுத்துகின்ற இறைவன் றொழில் வகையினையும் சிந்தனைசெய்து (தானடந்து கொள்ளுமியல்பினிற்) சோர்வுற்றவனாகிய பிரமன் தனக்கு நேர்ந்த துன்பினைத் தணிக்க ஏதுவினையும் (இறைவன் திருவருளால்) சிறிதறிந்தான். |