பக்கம் எண் :

228தணிகைப் புராணம்

(வி - ம்.) கற்றல் - கல்வி. நன்று - பெரிது. முற்றுமேல்வை - அடையுங்காலம். அதன்பயன் - அவ்வூழின்பயன். செற்று - அப்பயனைத் தடுத்து. உறுத்தும் - ஊழினை வலியுறுத்தும். நான்முகன், நான் கற்றவனாயிருந்தும், அதன் பயனை ஊழ் அடையாவண்ணந் தடுத்த தென்றுணர்ந்தானென்பார் "ஆற்ற ஏதுவும் சிறிதறிந்தான்" என்றார்.

 உலக மாக்கிடு முதற்றொழிற் குரியவ னிமைப்பின்
 அலகில் காலங்க ளருந்துயர் படும்பிழைப் பிழைத்தால்
 புலனி லாதெமைப் போல்பவர் பொழுதெலாம் பிழையே
 பலவு மாற்றுவார் பருவருந் துயரென்று பரிவார்.

(இ - ள்.) உலகத்தைப் படைக்கின்ற முதற்றொழிற்குரியவனாகிய பிரமன் இமைப்பொழுதில் அளவிடப்படாத காலங்கள் அரிய துயரை யனுபவித்தற்குக் காரணமாகிய தவற்றினைச் செய்வானாயின் அறிவில்லாமல் எம்மைப்போல்பவர், காலமெல்லாம் குற்றங்கள் பலவுஞ் செய்வார்கள். அவர்கள் வருத்துகின்ற துன்பத்தினை யெக்காலத்து நீக்குவார்கள்.

(வி - ம்.) பருவருந்துயர் - வருத்துகின்ற துன்பம். பரிவார் - நீக்குவார்.

(59)

 தீய பாவங்க ளளற்றன்றித் தீர்வுகா ணாதால்
 ஆய பல்வகை யளறென்ப வருந்துய ரப்பால்
 மேய நான்முகன் வழிபடா வறன்கடை விளிக்கும்
 தூய தண்டமுங் கருணையே யன்றுகொ றுறவீர்.

(இ - ள்.) கொடிய பாவங்களின் பயன் நரகத்துன்பத்தை யனுப வித்தாலன்றி நீங்காது. அங்ஙனமாய பலவகை நரகமென்று சொல்லப்படுவன அரிய துன்பங்களாம். அத்துன்பத்தின் பகுதியைப் பொருந்திய பிரமன் (முருகப்பெருமானை) வழிபடாத பாவத்தைக் கெடுக்கும் பரிசுத்தமான தண்டமும் துறவிகளே ! (பிரமன் மாட்டு முருகப்பெருமான் வைத்த கைம்மாறில்லாத) கருணையே யல்லவா ? (கருணையேயாம்)

(வி - ம்.) அளறு - துன்பமாகும். அப்பால் - அத்துன்பப் பகுதியை. வழிபடா - ஈறுகெட்ட பெயரெச்சம். அறன்கடை - பாவம். "அறன்கடை நின்றாருளெல்லாம்" என்னும் திருக்குறளடியானுணர்க. விளிக்கும் - கெடுக்கும். தண்டங் கருணையாவதை "தண்டமுங் கருணை யென்றறிவாய்" என்னும் சித்தியார்ச் செய்யுளானறிக.

(60)

 ஆர ணன்றுயர்க் கவதியின் றதுநிற்க விப்பால்
 பூர ணன்புகர் துமித்தருள் வழங்கிடும் புனித
 கார ணன்புவ னங்களை யளிப்பது கருதிச்
 சீர ணங்கிய வேங்கடச் சிலம்பினைச் சார்ந்தான்.

(இ - ள்.) வேதத்தை யோதி முற்று முணர்ந்தவனாகிய பிரமனது துன்பினுக்கு முடிவின்று அதுகிடக்க. பின்னர், எங்கும் நிறைந்தவனும், ஆன்மாக்களுக் காணவமலத்தினைப் போக்கித் திருவருள் சுரக்கும்