பக்கம் எண் :

வீராட்டகாசப் படலம்231

 கானிவர் மதமூன்றுங் கதிர்மணி வரன்றொழுகித்
 தேனிவர் வரையெல்லாஞ் சித்திரித் தனபோன்ற.

(இ - ள்.) யானைக் கூட்டங்களின் உடல்கெடும் வண்ணம் வாலினாற் பல்காலும் வீசி யெழுகின்ற சிங்கமானது தசை பொருந்திய மத்தகத்தினிடத்து உகிராற் பிளத்தலைச் செய்தலாலுண்டாகிய இரத்தமும் காட்டின்கண் ஓடுகின்ற மும்மதங்களும் ஒளி பொருந்திய முத்து முதலிய அரதனங்களையும் வாரிக்கொண்டு செல்லுதலான் தேன் பொருந்திய மலையிடமெல்லாம் சித்திரித்தாலொத்தன.

(வி - ம்.) மான் - ஈண்டு யானைகள். சிந்த - கெட. வால்வெடித்தல் - வாலினால் வீசுதல். இதனை, "கண்டபினின்னைக் காண்பே கரைவரை யுலம்பிப் பல்கால் - விண்டுவு முடைய வாலின் வெடித்துராய் வெகுண்டு நோக்கா" என்னும் சிந்தாமணி (கனக - 193) அடிகளானு மதனுரையானுமறிக. நெய்த்தோர் - இரத்தம்.

(66)

 பாரித்த வெறுழெருத்துப் பானிற வுளைவயமா
 வாரித்த வயிற்குவவு மத்தகத் துகுமணியும்
 சீரித்த மணிமருப்புஞ் செற்றுபு சுவையமிழ்தம்
 பூரித்த மதிகோடி புணர்ந்தென வொளிவீசும்.

(இ - ள்.) பரந்த வலியோடு கூடிய பிடரின்கண் வெள்ளிய தலை யாட்டமமைந்த மயிரினையுடைய சிங்கங்கள் அகப்படுத்துக்கொண்ட இடங்களில் (யானைகளின்) திரண்ட மத்தகத்தைப் பிளத்தலான் அம் மத்தகத்தினின்று சிந்திய முத்துக்களும், சிறப்பினையுடைய அழகிய கொம்புகளும் நெருங்கி இன்சுவையினையுடைய அமிழ்தம் நிறைந்த கோடிமதிகள் விண்மீன்களோடு புணர்ந்ததென்று சொல்லும் வண்ணம் ஒளியை வீசாநிற்கும்.

(வி - ம்.) பாரித்த - பரவிய. இதனை "முருகுவிம்மு கோதையார் மொய்யலங்கல்வண்டுபோல், பருகுவா னிவணலம் பாரித்திட்ட இந்நகர்" எனவரும் சிந்தாமணி (காந்த - 214) செய்யுளடிகளானு மவைகளினுரையானு முணர்க. வாரித்தவயின் - அகப்படுத்துமிடம். இதனை, "என்னை பட்ட வாறரோ எழுதிநங்கை யாட்கொள்வான், மன்னும்வந்து பட்டனன் மணிசெய்வீணை வாரியே" என்னும் (சிந்தாமணி காந்த - 216) செய்யுளடிகளானு மவைகளினுரையானு முணர்க. முத்துங்கொம்புஞ் சேர்ந்தொளி வீசுதல் தாரகையோடு சந்திரன் கூடி யொளிவீசல் போலக் கொள்க. "அதுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி" என்னும் தொல்காப்பியச் சூத்திர அடியின்கண் பெயரினடியாகப் பிறந்த பெயரிய என்னும் பெயரெச்சம் கிளவியென்னும் பெயர்கொண்டு முடிந்தாற்போல அகப்படுத்துமிடமெனப் பொருள்படும் வாரியென்னும் பெயரினடியாகப் பிறந்த வாரித்த என்னும் பெயரெச்சம் வயினென்னும் இடப்பெயரோடு முடிந்தது.

(67)

 ஆணடி நிழலோம்பி யமர்துயின் மகண்மாவை
 ஏணமர் வரைச்சிறுவ ரெயிற்றிய ரெனவண்மிக்