| | காணுநர் கானான்கிற் கன்னிய ரெனவியவாப் | | | பூணுறு பாசத்தாற் பூட்டினர் போதருவார். |
(இ - ள்.) தூரோடு கூடிய ஆணென்னு மரத்தினிழலால் பாது காக்கப்பெற்று நித்திரை செய்கின்ற மகண்மாவென்னு மிருகங்களை வலிமை தங்கியவரையின் கண்ணுள்ள வேட்டுவச் சிறார்கள் வேடப் பெண்களென்று நினைத்துப் பொருந்திக் கண்டவர்கள் (அவைகளை) நான்கு காலினையுடைய பெண்களாமென்று வியந்து கட்டத்தக்க கயிற்றாற் கட்டிச்செல்வார்கள். (வி - ம்.) ஆண் - ஒருவகை மரம்; இதனை "ஆண்மரக் கிளவியொடு மரவியற்றே" என்னும் தொல் எழுத்ததிகாரச் சூத்திரத்தானுணர்க. நிழல் - மூன்றாவதன்றொகை. துயிலமர் என - மாற்றுக. மகண்மா - பெண்களின் முகம்போன்ற முகத்தையுடைய ஒருவகை விலங்கு; இதனை, "மைந்தரைப் பார்ப்பன மாமகண் மாக்குழாம்" எனும் சிந்தாமணி (விமலை - 14)ச் செய்யுளடியானு மதனுரையானு முணர்க. ஏண் - வலிமை. நான்கு காலின் கன்னியரென மாற்றுக. போதருவார் - செல்வார். ஓம்பியென்னும் செய்வினை செயப்பாட்டு வினையில் வந்தது. (68) | | புழுகொடு கத்தூரி புள்ளுவர் பலர்கொண்மார் | | | ஒழுகிய வரையெங்கு முலம்பிய கரிநாடும் | | | முழுவலிச் சீயத்தின் முழக்கினுக் குளமஞ்சி | | | விழுமவை யெளிதாக வெஃகினர் பெயர்த்தெழுவார். |
(இ - ள்.) புழுகு பூனையுடனே கத்தூரி மிருகத்தினையும் பல வேடர்கள் கொள்ளச் சென்ற மலையிடமெங்கணு முழங்குகின்ற யானைகளை இரையாக ஆராயும். மிக்க வலியினையுடைய சிங்கங்களின் முழக்கத்தினுக் குள்ள மஞ்சிக் கீழே விழுகின்ற புழுகு பூனையையும், கத்தூரி மிருகத்தினையும் எளிதாக விரும்பிப் பற்றினவராகிப் பெயர்ந்து செல்வார். (வி - ம்.) புள்ளுவர் - வேடர். கொண்மார் - கொள்ள. ஒழுகிய - சென்ற. உலம்பிய - முழங்கிய. அவை - புழுகு பூனை கத்தூரி மிருகங்கள். வெஃகினர் - வெஃகி, முற்றெச்சம். (69) | | ஏலமொ டிலவங்க மிளகுபச் சிலைமஞ்சள் | | | வாலிய கப்பூர மணத்தகுங் குமஞ்சாந்தம் | | | ஆலிய வகில்வாழை யாசினி முதலாகச் | | | சாலவிண் ணவர்விழையுந் தகையன வகையனவே. |
(இ - ள்.) ஏலச்செடியுடனே, இலவங்கமரமும், தளிர்த்த பச்சிலை மரமும், மலைமஞ்சளும், வெள்ளிய கருப்பூரமரமும், மணத்தையுடைய குங்குமமரமும், சந்தனமரமும், அசைகின்ற அகின்மரங்களும், வாழை மரங்களும் பலா விசேடங்களுமாகிய மரங்கள் தேவர்களு மிகவிரும்பும் தகுதியை யுடையனவாகிய வகையுடையன. (வி - ம்.) கருப்பூரம் - கருப்பூரமரம்; "சாரலந் திமிசிடைச் சந்தனத் தழைவயின் னீரதீம் பூமரந் நிரந்ததக் கோலமும், ஏரில வங்கமும் இன்கருப் |