பக்கம் எண் :

234தணிகைப் புராணம்

சுழியைச் செய்து பொங்கி இரண்டு பக்கங்களிலும் ஒழுங்காகச் செய்த கரையென்று சொல்லும் வண்ணமொழுக்கி ஓசையை எழுப்பிச் சென்று இடமகன்ற வயல்களோடுகூடிய மருதநிலத்தின்கணுள்ள இளம் பயிரை வளர்ப்பனவாம்.

(வி - ம்.) ஆங்கு - அம்மலையடி. சுழித்து - சுழியைச்செய்து. பால் - பக்கம். வடி - செப்பஞ்செய்த. குலை - கரை. வார்த்து - ஒழுக்கி. இடவிய - இடமகன்ற.

(73)

 மல்லிகை கொடிமுல்லை மாதவி கூதாளம்
 பல்லிணர் மந்தாரம் பாதிரி புன்னாகம்
 மெல்லிதழ் மலர்ப்பிண்டி வேங்கைசண் பகவாசத்
 தல்லுறழ் குழலாரி னருவரை நிகராமால்.

(இ - ள்.) மல்லிகையும், கொடிமுல்லையும், மாதவியும், வெண்டாளியும், பல கொத்துக்களையுடைய மந்தாரமும், பாதிரியும், புன்னாகமும் மெல்லிய இதழ்களையுடைய மலர்களையுடைய அசோகமும் வேங்கையுமாகிய இவைகளின் வாசனையையுடைய இருளையொத்த கூந்தலையுடைய பெண்களை, அரியவரையு மிவைகளைத் தன் முடியி லுடைமையால் ஒக்கும்.

(வி - ம்.) கூதாளம்- வெண்டாளி. இன் - தவிர்வழிவந்த சாரியை. இவைகளை மலையும் தன் முடியிலுடைமையால் "அருவரை நிகராமா" லெனக் கூறினார்.

(74)

 நிறைநிகர் கோங்கங்காய் நெட்டணி லிலவங்காய்ப்
 பறைதரு பஞ்சோடும் பன்மயி லுகுபீலி
 உறைமது மலர்மயங்கி யொண்டுகள் விரவிமண
 வறையென வறைபலவு மமரருள் ளமுமுடற்றும்.

(இ - ள்.) குடத்தையொத்த கோங்கின்காயும், நீண்ட அணில் போன்ற இலவங்காய்களுமாகிய இவைகளினின்றும் பறக்கின்ற பஞ்சினோடும், பல மயில்களுகுத்த தோகைகளும், துளிக்கின்ற தேனையுடைய மலர்களோடு கலந்து மகரந்தப் பொடிகளும் கலக்கப்பெற்று மணவறை யென்று சொல்லும் வண்ணம் பாறைகள் பலவும் தேவர்களுள்ளத்தையும் வருத்தும்.

(வி - ம்.) நிறை - குடம். கோங்கின்காய் குடம்போலிருக்கு மென்பதை "மரவ நாக மணங்கமழ் சண்பகம், குரவம் கோங்கம் குடம் புரை காய்வழை" எனவரும் சிந்தாமணி (விமலை 29) செய்யுளா னறிக. இலவங்காய் விரிந்து பஞ்சு தோன்றினாற்போல அணில்களிருக்கு மென்பதனை "இலவத் தலங்கு சினைபயந்த, பூளையம் பசுங்காய் புடைவிரிந்தன்ன, வரிப்புற அணிலொடு" எனவரும் (பெரும்பாண். 83 - 84) அடிகளானுணர்க. பறை - பறத்தல்; இதனை "குறையணி கொண்ட வாறே கோதைகா றொடர வோடிச், சிறையழி செம்பொ னுந்தித் தேன் பொழிந் தொழுக வேந்திப், பறையிசை வண்டு பாட" எனவரும் சிந்தாமணி (இலக்கணை. 160) செய்யுளானு முரையானு முணர்க. இனி, நிறை மிடாவெனினுமமையும். பின்னைய அறை - பாறை.

(75)