பக்கம் எண் :

வீராட்டகாசப் படலம்237

 எண்குணந் தனக்கே யன்றி யில்லாதா யெங்கு நின்ற
 ஒண்குணப் பொருளே யான வுத்தமக் குமரப் புத்தேள்
 நண்குணத் தவர்தங் கோளு நயக்குமே யென்ன லாங்கும்
 வண்குணத் தவனே பேற்றின் வயக்குமா லவர்க்கொன் றின்றே.

(இ - ள்.) (தன்வயத்தனாதல் முதலிய) எண்வகைப்பட்ட குணங்களுந் தனக்கே யல்லாமல் (வேறொரு தலைவர்க்கு) மில்லாதாய் எங்கும் நிறைந்து நின்ற வெள்ளிய குணப்பொருளேயாகி நின்ற உத்தமத் தன்மையை யுடைய குமரக்கடவுள், நண்ணுகின்ற சத்துவ முதலிய குணங்களிற் றோன்றிய பிரமன்விண்டு உருத்திரர்களுடைய கொள்கையாகிய முத்தொழிலையும் விரும்புவானோ என்று கருதற்க. அம்மூவரிடத்தும் வண்மைக் குணத்தையுடைய அம்முருகக் கடவுளே அம்மூவர்கள் தவப்பேற்றினால் விளக்கம் செய்வான் அம்மூவர்க்கு மம்முத்தொழிலி லொருசுதந்திரமு மின்று.

(வி - ம்.) நண்குணம் : வினைத்தொகை. கோள் - கொள்கை. நயக்கும் : செய்யுமென் முற்று. ஏகாரம் : வினா. என்னல் - என்று கருதற்க; எதிர்மறை வியங்கோள் வினைமுற்று. ஆங்கு - அம்மூவரிடத்தும். குணத்தவன் : வேற்றுமைத்தொகை. பேற்றின் - அம் மூவர்கள் தவப் பேற்றினால்; இதனை "உரைத்தஇத் தொழில்கண் மூன்றும் மூவர்க்கென் றுலக மோத, வரைத்தொரு வனுக்கே யாக்கி வைத்ததிங் கென்னை யென்னின், விரைக்கம லத்தோன் மாலும் மேவலான் மேவி னார்கள். புரைத்ததி கார சத்திப் புண்ணியம் நண்ணலாலே" என்னும் சிவஞானசித்தித் திருவிருத்தத்தா னுணர்க. ஆல் : அசை.

(81)

 முற்றிய செல்வ நல்கு முதல்வர்பாற் றருக்கி னன்றே
 சுற்றமு மினமுந் தானுந் துறப்பதற் கைய மில்லை
 கற்றையஞ் சடிலத் தேவாங் கந்தனை யிகந்தவேதன்
 மற்றவ ரோடுஞ் செய்கை மறுத்தினைந் திருந்த வாற்றால்.

(இ - ள்.) கூட்டமாகிய அழகிய சடையையுடைய தெய்வமாகிய ஆறுமுகப்பெருமானை (வணக்கம் செய்யாது) நீங்கிய பிரமன் சுற்றத்தார், இனத்தார் முதலியோரோடு படைப்பாதி தொழிலுமில்லாமல் வருந்தியிருந்த தன்மையினாலே தவப்பேற்றினாலடைந்த செல்வத்தைப் பிறர்க்களிக்குந் தலைவர்களிடத்துத் தருக்கினை (ஒருவன்) மேற்கொள்வானாயின் அக்கணமே (தந்தைதாயர் மனைவி முதலிய) சுற்றத்தாரும், இனத்தவர்களும் தானும் (செல்வங்களைத்) துறப்பதற்கொரு சிறிதும் ஐயமின்று.

(வி - ம்.) முற்றிய - அடைந்த. முதல்வர் - தலைவர். அன்றே - அக்கணமே. அவரோடும் - சுற்றிமினமாகிய அவர்களோடும், செய்கை - படைப்பு முதலிய தொழில். இனைந்து - வருந்தி. துறப்பதற்கு - (செல் வத்தைத்) துறப்பதற்கு; செல்வமென்றது சிருட்டியாதியை யென்க.

இது வேற்றுப்பொருள்வைப்பணி.

(82)