| லோகத்தின்கண் முறையாகச் செங்கோலைச் செலுத்துகின்ற மிக்க தகுதியையுடைய இந்திரன், பிரளயகாலத்தில் உலகத்தினையுண்ட வாசனை வீசுகின்ற துளபமாலையை யணிந்த மாயவனும், பெரிய தவத்தினை யுடையமுனிவர்களும், ஏனையோரும் செறிந்த கிரணங்கள் இமையா நிற்பத் தெளிந்த ஒளியை எல்லாத் திக்கினும் வீசாநின்ற கயிலை மலையினை யடைந்தார்கள். (வி - ம்.) பொலம் - பொன். உளி- மூன்றாவதன் பொருள்பட வந்த இடைச்சொல்; இதனை "மந்திரவிதியின் மரபுளிவழா" என்னும் திருமுருகாற்றுப்படையானுணர்க. தொங்கல் - மாலை. தெள்ளொளி வீசும் கயிலையென மாற்றுக. (85) | | வாயிலி னந்தி பாதம் வணங்கினர் விடைகொண் டேகிப் | | | பாயின பரும வல்குற் பைந்தொடி யோடு வைகும் | | | ஆயிர நாமத் தண்ண லடிமல ரன்பிற் றாழ்ந்து | | | மேயின துதிகள் செய்து விரிகரங் குவித்து நின்றார். |
(இ - ள்.) முதற்றடையின் கண்ணுள்ள நந்தியெம்பெருமான் திருவடிகளை வணங்கி விடைபெற்றுச் சென்று பரவிய மேகலையினை யணிந்த கடிதடத்தினையும் பசிய வளையலினையுமணிந்த உமையம்மையா ரோடு மெழுந்தருளியிருக்கின்ற பேராயிரமுடைய பெம்மானதடியாகிய மலரின்கண் அன்பினால் வணங்கிப் பொருந்திய துதிகள் செய்து விரிந்த கைகளைக் குவித்து நின்றனர். (வி - ம்.) பாயின - பரந்த; பெயரெச்சம். பருமம் - மேகலை விசேடம். பைந்தொடி : அன்மொழித்தொகை. ஆயிரநாமத் தண்ணல்: சிவபெருமான். (86) | | கவலைநெஞ் சலைப்ப நின்ற கடவுளர் தம்மைச் செந்தேன் | | | துவலைசெய் கொன்றை மாலைச் சுந்தர னருளி னோக்கி | | | நவிலுதிர் வரவை யென்ன நவிற்றவஞ் சுதும்யா மென்றார் | | | சவலையீ ரெம்மு னஞ்சல் சாற்றுதி ரென்னச் சொல்வார். |
(இ - ள்.) துன்பமானது மனத்தினை வருத்தாநிற்ப நின்ற தேவர்களைச் செவ்விய தேன்றுளித்தலைச் செய்கின்ற கொன்றை மலர் மாலையை யணிந்த பேரழகனாகிய சிவபெருமான் கருணை நோக்கஞ் செய்து நுங்கள் வரவைச் சொல்லுங்கோளென்று திருவாய்மலர்ந்தருள அத்தேவர்கள் சொல்லுதற்கு யாங்களஞ்சுகின்றோமென்றனர். துன்பத்தினாற்றுயக்கமுறுகின்றவர்களே! எம் முன்னர் (அஞ்சாது) சொல்லுங்களெனச் சொல்வார்கள். (வி - ம்.) துவலை - துளி. சுந்தரன் - பேரழகன். சவலை - துன் பத்தாலிளைத்தல். அல் : எதிர்மறை வியங்கோள் விகுதி. (87) | | இடும்பையங் கடலுட் டாழ்ந்த வெங்களை யெடுக்கத் தோன்றும் | | | கடம்பனை யிளைய னாகக் கருதிமென் கமலத் தோன்றல் | | | மடம்படு பேதை நீரால் வணங்கில னீங்குப் போந்து | | | குடம்பையு ளுலண்டு போலக் கோட்படும் வினையன் மீண்டான். |
|