| முதலிய செயலொரு சிறிதுமில்லாத கேவல நிலையிலும், கருணைவைத்து அடிமைகொள்ளும் பக்குவத்தைக் கருதி அழியாத மெய்யருளால் தனு கரணபுவன போகங்களை யுதவிச் சகலாவத்தையிற் கொண்டுவந்த தேவாதிதேவனே இப்பிழையினைத் திருவுளத்தடையாது காப்பது அருமையதாகுமோ? என்க. (வி - ம்.) இருள் - ஆணவம். முன்னரே பெருமானை நீங்கியாண வத்திற்பட்ட குற்றமென்க. ஆணவத்திலாழ்ந்து செயலற்றுக் கிடக்குங் காலத்தும் பருவம் நோக்கித்தந்த வண்டனென்க. பருவம் - பக்குவம். கோணை - அழியாத. அண்டன் : அண்மைவிளி. அரிதுபோலும் - அரியதாகுமோ என்க. (93) | | அவ்வயிற் சேறு மாயி னடர்க்குமென் றஞ்சு கின்றேம் | | | இவ்வயிற் சார்வு மஞ்சி யிருந்தன மின்று காறும் | | | ஒவ்வரும் பொருளே நீப்பி னுயங்குவே மன்ற வன்றி | | | எவ்வயிற் சேறு மெந்தா யிரங்குகென் றிரந்து தாழ்ந்தார். |
(இ - ள்.) அத்திருவேங்கடமலைக்குச் செல்வோமாயின் (அம்முருகக் கடவுள்) வருத்துமென்று பயப்படுகின்றோம். இக்கயிலையிடத்திற் பொருந்துதற்கும் பயந்து இற்றைவரை வாளா இருந்தனம். உவமை யிலவாகிய பரம்பொருளே! பெருமான் இவ்வமையம் நீக்கின் நிச்சயமாக வருந்துவோம். அல்லாமலும் (புகலிடமாக வேறு) எவ்விடத்து (எளியேங்கள்) செல்வோம். எந்தந்தையே இரங்கவேண்டுமென இரப்புரை கூறி வணங்கினார். (வி - ம்.) ஒவ்வரும் - ஒப்பற்ற. மன்ற - தேற்றமாக. (94) | | தாழ்ந்தவர் வறிய ராகாத் தன்மையன் கருணை கூர்ந்து | | | போழ்ந்தநுந் துயரந் தீர்மி னெனவருள் புரிந்து பொற்றார் | | | ஊழ்ந்துக வமரர்த் தாக்கி யொளிர்ந்தவேத் திரத்திண் கையின் | | | வாழ்ந்திடுங் காவ லானை வருகென வழைத்துக் கூறும். |
(இ - ள்.) தன்னை வணங்கிய அடியார்கள் வறுமையுடையவர்களா காததற் கேதுவாகிய (சென்றடையாத் திருவினையுடையனாகிய) தன்மையையுடைய சிவபெருமான் கருணைமிகுந்து நுங்களைப் பிளந்தன வாகிய துன்பத்தினின்றும் நீங்குமின் என்று கருணைசெய்து பொன்னாலாகிய மாலையானது பதனழிந்து சிந்தத் தேவர்களையடித்து ஒளிர்கின்ற வலிமை பொருந்திய கையின்கண் பிரம்புடனே வாழ்கின்ற காவலை யுடையனாகிய நந்தியெம்பெருமானை வரக்கடவா யென்றழைத்துச் சொல்லுவான். (வி - ம்.) ஊழ்த்து - விகாரம். காவலான் - நந்தியெம்பெருமான். போழ்ந்த - பிளந்தன : முற்றெச்சம். கூறும் - செய்யுமென்முற்று. (95) | | பொலங்குவட் டருவி தத்திப் பொன்மணி வரன்றி வீழ்ந்து | | | நிலங்கிழித் தொழுகி யோடி நிமிரும்வேங் கடத்தை யண்மி | | | அலங்கலங் கடப்பந் தாரா னடிமல ரன்பிற் றாழ்ந்து | | | நலங்கிளர் குடந்த முற்று நயத்தகு துதிக ளார்த்தி. |
|