பக்கம் எண் :

வீராட்டகாசப் படலம்243

(இ - ள்.) பொன்மயமாகிய குடுமியினின்றும் மருவியானது தத்துற்றுப் பொற்கட்டிகளையும், மணிகளையும், வாரிக்கொண்டு கீழே வீழ்தலுற்று நிலத்தினைப் பிளந்து ஒழுகுதலுற்றுச் செல்லும் உயர்ந்த வேங்கடமலையினைப் பொருந்தி அழகிய கடப்பமாலையினை யணிந்த முருகனது பாதமாகிய மலரினை அன்போடு வணங்கி நன்மை மிகும் வண்ணம் கைகூப்பி மெய்கோட்டி நின்று நலமிகுந்த தோத்திரங்களைச் செய்து.

(வி - ம்.) தத்தி - தாவி. ஓடி - எச்சத்திரிபு; "வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய" என்றாராகலின். குடந்தம் - கைகூப்பி மெய்கோட்டி நிற்றல்.

(96)

 உருவம்வே றன்றி யைந்து முகனறு முகனென் றோதும்
 திருவுரு விரண்டன் மாட்டுஞ் சிவமெனும் யாமே மன்ற
 பொருவிலா ருயிராய் நிற்பேம் பொலிந்தவிவ் வுருவி னின்றும்
 தருவர மவண தாங்குத் தருவர மிவண தாமே.

(இ - ள்.) வடிவம் வேறல்லாமல் ஐந்து முகத்தையுடையான், ஆறுமுகத்தை யுடையான் என்று (அடியார்கள் சிறப்பித்துப் புகழ்கின்ற) திருவுருவங்க ளிரண்டனிடத்தும் சிவமென்கின்ற யாமே நிச்சயமாக ஒப்பில்லாத அரிய உயிராகி நிற்பேம். பொலிவோடுகூடிய இவ் வைந்து முகத்தோடுகூடிய திருவுருவினின்று தந்தருளிய வரங்கள் அவ் வறுமுகத்தோடுகூடிய திருவுருவினின்று தந்தருளிய வரத்துக் கொத்ததாகும். அவ்வறுமுகத்தோடு கூடித்தந்த வரங்கள் இவ்வைந்து முகத்தோடு கூடித்தந்த வரத்திற் கொத்ததாகும்.

(வி - ம்.) உருவம் - வடிவம். மன்ற - நிச்சயம். இவ்வுரு - இவ்வைந்து முகத்தோடுகூடிய திருவுருவம். அவணதாகும் - ஆறுமுகத்தோடுகூடிய வடிவிற் கொத்ததாகும். ஆங்குத் தருவரம். ஆறுமுகத்தோடுகூடித் தந்த வரங்கள் ஐந்து முகத்தோடு தந்தருளிய வரத்திற் கொப்பாகும். இவ்விரண்டு திருவுருவின்மாட்டும் யாமே நிறைந்துள்ளேம். எம்மையன்றிக் குமரன் வேறல்லன் என்பார் "மன்ற பொருவி லாருயிராய் நிற்பே" மென்றார்.

(97)

 மாதவன் முதலோர் வேண்ட மலரவன் சிறையைச் சீக்கும்
 ஏதமில் வரமீண் டாயிற் றிவ்வர மவண தன்றே
 போதனைச் சிறையை நீக்கிப் புகுதக வீண்டென் றெம்மால்
 ஆதரு மின்றீஞ் சொல்லா வறைமதி மேன்மை யோடும்.

(இ - ள்.) இலக்குமிநாயகன் முதலிய தேவர்கள் வேண்டிக் கோடல் செய்யத் தாமரை மலரின்கண்ணுள்ள பிரமனைச் சிறையினின்று நீக்கும் குற்றமில்லாத இவ்வைந்து முகத்தோடுகூடிய இவ்வடிவத்தின்கண் ணுண்டாயிற்று. (ஆதலால் இங்ஙனம்தந்த) இவ்வரம். அறுமுகத்தோடுகூடிய திருவுருவத்தினின்றும் தந்ததேயாகும். ஆகையால் மலரின்கண்ணுள்ள பிரமனைச் சிறையினின்றும் நீக்கி இக்கயிலைக்கு வரக்கடவதென்று எம்மாலுளதாகுமினிய சொல்லாக மேன்மை பொருந்தச் சொல்வாய்.