(வி - ம்.) சிறையிரண்டும் வேற்றுமை மயக்கம். அவணது - அறுமுகத்தோடு தந்தவரம். ஆதரும் - உளதாகிய. சொல்லா - செயவெனெச்சமீறு தொக்கது. (98) | பைத்தபூஞ் சேக்கை மேலான் படர்பெருஞ் சிறையைச் சீத்து | | வித்தக னிங்கு மேவு மவனொடு மேக வென்றான் | | அத்தனவ் வருண்மேற் றாங்கி யருணந்தி தேவன் வல்லே | | தொத்தலர் குளிர்பூஞ் சோலை சூழ்ந்தவேங் கடத்தைச் சார்ந்தான். |
(இ - ள்.) பரந்த பூஅணையின்கண்ணே யுள்ளவனாகிய பிரமன் மெலிவுக்கேதுவாகிய சிறையினை நீக்கி ஞானவடிவாகிய இளையபிள்ளை இவண்வருவான். அவனோடும் நீயிங்குப் பொருந்துக என்றான். தந்தையாகிய சிவபெருமானது அவ்வருளைச் சிரமேற்கொண்டு கருணையையுடைய நந்தியெங்குரவன் விரைவாகப் பூங்கொத்துக்களால் சூழப் பெற்ற குளிர்ச்சி பொருந்திய சோலைகளாற் சூழப்பெற்ற வேங்கடமலையை யடைந்தான். (வி - ம்.) வித்தகன் - முருகக்கடவுள். மேவும் - அடைவான்; செய்யும் என்முற்று. மேக என்றான் . பொருந்துக என்றான் - மேவுக. என்பதிடைக் குறைந்து நின்றது. (99) | எட்டுறுப் பானு மைந்த னானுமங் கெதிரே வீழ்ந்து | | மட்டலர்க் கமல மேய்க்கு மலரடி பழிச்சும் வாயான் | | மொட்டுறு கமலம் வெல்ல முகிழ்துணைக் கரத்தாற் சேர்ந்து | | நெட்டுட றனுவிற் கோட்டி நின்றிறை யருளீதென்றான். |
(இ - ள்.) எட்டங்கங்களானும், ஐந்தங்கங்களானும் அம்முருகப் பெருமான் திருமுன்னர் வீழ்ந்து தேன் விரியப்பெற்ற தாமரைமலரை நிகர்க்கும் விரிந்த பாதங்களைத் துதிக்கும் வாயையுடையானாகித் தாமரை யரும்பை வெல்லக் குவிக்கின்ற கரத்தோடு பொருந்தி நீண்டவுடலினை விற்போல வளைத்துநின்று எம்பெருமானுடைய திருவருள் இஃதாகுமென்று சொன்னான். (வி - ம்.) ஏய்க்கும் - ஒக்கும். வாயான் - முற்றெச்சம். கமலம் : இரண்டனுருபுத் தொகை. இல் - ஐந்தாவதொப்புப் பொருள். கோட்டுதல் - வளைத்தல். (100) | அமலனா ரருளிற் றெல்லா மங்ஙனங் கிளத்த லோடும் | | கமலநான் முகத்தி னானைக் காவலிற் பெயர்ப்ப வேவிக் | | குமரவேள் கயிலை யண்மிக் கோயிலைக் குறுகா நின்றான் | | விமலனார்க் குணர்த்தி னானால் விரைந்துமுன் சென்று நந்தி. |
(இ - ள்.) மலமற்றவராகிய சிவபெருமான் திருவாய்மலர்ந்தருளிய எல்லாவற்றையும் அவ்வாறே விண்ணப்பித்த அளவில் தாமரை மலரின் கண்ணுள்ள நான்முகங்களையுடைய பிரமனைச் சிறையினின்று நீக்கும் வண்ணம் ஏவலாளரை யனுப்பிக் குமரக்கடவுள் கயிலைமலையை யணுகித் திருக்கோயிலைக் குறுகாநின்றனன். நந்தியெம்பெருமான் விரைவாகச் சென்று விமலராகிய சிவபெருமானுக்குத் தெரிவித்தான். |