பக்கம் எண் :

248தணிகைப் புராணம்

வென்றி - மேம்பாடு. இதனை "வண் டுறைசை வென்றசீர் நமச்சிவாய மெய்க் குரவனை வணங்கி" என்னும் தருக்க சங்கிரகக் காப்புச் செய்யுளா னறிக.

(109)

 விரகிலான் பிரணவ மெய்ப்பொரு ளோர்கிலான்
 பிரணவப் பொருளிலான் பிறழ்தரா துலகெலாம்
 வரனுடைச் சிருட்டியின் வயக்குவா னலனரை
 அரவினா யெங்ஙன மளித்தனை யென்றனன்.

(இ - ள்.) நுண்ணறிவிலாதவன். பிரணவமென்னும் மந்திரத்தின் உண்மைப் பொருளை ஆராயமாட்டான். பிரணவமென்னும் மந்திரத்தி னுண்மைப்பொருளை யுள்ளவாறுணராதவன். முறைமாறுபா டில்லாமல் உலகங்களையெல்லாம் மேன்மை பொருந்திய படைப்புத் தொழிலான் விளக்கும் வல்லமையை யுடையவ னாகான். அரவினைத் திருவரையின் கண்ணணிந்தவனே! படைத்தற் றொழிலை யவனுக் கெவ்வாறு கொடுத்தனை.

(வி - ம்.) வயக்குவானலன் - விளக்குவானல்லன். எங்ஙனம் - எவ்வாறு. அளித்தனை - கொடுத்தாய்.

(110)

 மைந்தநீ யதன்பொருள் வல்லையே லுரையென
 முந்துமெப் பொருள்களு முறையன்றி யருள்செயா
 என்தையப் பொருள்பொழு திடமறிந் தியல்புளித்
 தந்திடத் தக்கதன் றேயெனச் சாற்றினான்.

(இ - ள்.) மகனே! நீ அப் பிரணவப் பொருளைக்கூற வல்லமை யுடையையாயின் சொல்வாயென, முற்பட்ட எவ்வகைப் பொருளையும் திருவாய் மலர்ந்தருளு முறையா னன்றித் திருவாய் மலர்ந்தருளாத என தருமைத் தந்தையே! அப்பிரணவப் பொருள் நல்லோரையும் வாலிதாகிய இடமு மறிந்து வரலாற்று முறைப்படி செவியறிவுறுக்கத் தக்க தல்லவா? என்று சொன்னான்.

(வி - ம்.) எந்தை - அண்மைவிளி. பொழுது - காலம். இடம் - வாலிதாகிய இடம். ஏகாரம் வினா.

(111)

 வாய்மையே கூறினை மாசிமா மகமிதோ
 மேயதா னீயுளம் விழைதகப் பயிலிடம்
 ஆயசீர்க் கணிகவெற் பமைந்துளந் தகப்பொருட்
 கேயுமா றேற்குது மேகுது மவ்வயின்.

(இ - ள்.) உண்மையினையே கூறினாய். நீ செவியறிவுறுத்தற்கு இதோ மாசிமதியின்கண் மகநாளும் பொருந்தியது. உள்ளம் விரும்பும் வண்ணம் நீ பயிலுமிடமாகிய சிறப்பினை யுடைய தணிகைமலையின்கண் யாம் தங்கி உளத்தின்கட் பொருந்த அப்பிரணவப் பொருளை வரலாற்று முறைக் கேற்குமாறு யாம் ஏற்றுக் கொள்வோம். அவ்விடத்திற்குச் செல்வோம்.