(வி - ம்.) தக - பொருந்த. அமைந்து - (யாம்) தங்கி. ஏற்குதும் - தன்மைப் பன்மைமுற்று. பொருட்கு - வேற்றுமை மயக்கம். (112) | வந்தனை யோதெனவானவ ரிந்திரன் | | பைந்துழாய்த் தொடையினன் படர்கணந் தொடர்தர | | இந்துவி னிமிழ்கதி ரிரசதப் புரிபொரூஉம் | | செந்துவர்ச் சடைமுடிச் செம்மலங் கண்மினான். |
(இ - ள்.) ஆண்டுவந்து செவியறிவுறுக்க வென்று திருவாய்மலர்ந் தருளித் தேவர்களும், இந்திரனும், திருத்துழாய் மாலையை யணிந்த திருமாலும் (சிவபெருமானையே) இடையறாது நினைக்கின்ற பூதகணங்களும் தொடர்ந்துவரச் சந்திரனிடத்து நின்று விரிகின்ற கிரணங்கள் வெள்ளியாலாகிய பழுதையை நிகர்க்கும் செவ்விய பவழம்போன்ற சடையினையுடைய தலைவனாகிய சிவபெருமான் அத்தணிகையை யடைந்தான். (வி - ம்.) வந்தனை : முற்றெச்சம். கதிர் - கிரணம். இரசதம் - வெள்ளி. புரி - பழுதை; கயிறு. துவர் - பவழம். செம்மல் - தலைவன். (113) | வளமலைச் சாரலின் வடகிழக் கெல்லையின் | | இளமதிச் சடையவிழ்த் திம்பரிற் றாழ்த்துபு | | களமிகுப் போரெனக் கருதருந் தியானமோ | | டுளமலி தவமொரு கணிகமுற் றானரோ. |
(இ - ள்.) எல்லா வளங்களும் நிறைந்த அத்தணிகைமலையி னடி வாரத்தின் வடகிழக் கெல்லையின்கண் பிறைச்சந்திரனை யணிந்த சடையை விரித்துப் பூமியில் தாழச்செய்து குற்றத்தினை நீக்குபவரைப் போல நினைத்தற்கரிய நினைவோடு உளத்தின்கணிறைந்த தவத்தினை யொருகணம் செய்தனன். (வி - ம்.) சடையவிழ்த்து - சடையை விரித்து. களம் - குற்றம். இகுப்போர் - நீக்குவோர். கணிகம் - கணம். தான்வழிபடுங் கடவுள் வேறில்லாதிருக்கவும். தியானித்தலால் "களமிகுப் போரெனக் கருதருந்தவமுற்றான்" என்றார். (114) | வழிபடுங் கடவுளொன் றின்மையின் வடநிழல் | | வழிபடு வோரெலாம் வடதிசை முகமுற | | வழிபடுங் கடவுளாய் வதிந்தவ னங்ஙனம் | | வழிபடக் கந்தனை மதித்தவ ணிருத்தலும். |
(இ - ள்.) தான் வழிபடுதற்குரிய கடவுளொன்றில்லாமையினானே கல்லால் நிழலின்கண் தம்மை வழிபடுகின்ற மெய்யடியார்களெல்லாம் வடதிசை நோக்கிய முகத்தோடு பொருந்த வழிபாடு செய்தற்குரிய (தென்முகத் தெய்வப் பரமாசாரியனாக) எழுந்தருளி யிருந்தவன் |