பக்கம் எண் :

250தணிகைப் புராணம்

வடக்கு முகமாக இருந்து கந்தப்பெருமானை வழிபடும் பொருட்டுத் தியானித்து அவ்விடத் தெழுந்தருளி யிருக்க.

(வி - ம்.) அங்ஙனம் - வடக்கு முகமாக இருந்து. மதித்தல் - ஈண்டுத் தியானித்தல்.

(115)

 என்றுமத் தாணியா வினிதுவீற் றிருக்குமக்
 குன்றிடைப் பலரொடுங் கொம்மெனத் தோன்றுபு
 மன்றலங் கொன்றையன் வதிந்தவச் சூழலில்
 தென்றிசை யெல்லையைச் சேர்ந்தெதிர் வைகினான்.

(இ - ள்.) முருகக்கடவுள், எஞ்ஞான்று மரசிருப்பு மண்டபமாக இனிதாக வேறொருவர்க்கில்லாத சிறப்புடனெழுந்தருளி யிருக்கும் அத் தணிகை மலையின்கண் மெய்யடியார்கள் பலரோடு விரைவாகத் தோன்றி வாசனை பொருந்திய அழகிய கொன்றை மலர்மாலையை யணிந்த சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற அவ்விடத்தின் தெற்குத் திசை யெல்லையை யடைந்து அப்பெருமான் திருமுன்னர்த் தங்கினான்.

(வி - ம்.) அத்தாணி - அரசிருப்பு மண்டபம். கொம்மென - விரைவுக்
குறிப்பிடைச் சொல்.

(116)

 எதிருறுங் குமரனை யிருந்தவி சேற்றியங்
 கதிர்கழல் வந்தனை யதனொடுந் தாழ்வயின்
 சதுர்பட வைகுபு தாவரும் பிரணவ
 முதுபொருட் செறிவெலா மொழிதரக் கேட்டனன்.

(இ - ள்.) தனக்கெதிரே பொருந்திய குமரப்பெருமானைப் பெரிய ஆதனத்தின்கண் எழுந்தருளச்செய்து அப்பொழுது ஒலிக்கின்ற வீரக் கழலை யணிந்த பாதங்களை வணக்கம் செய்தலோடு தாழ்ந்தவிடத்தில் மேன்மைப் பாட்டுடன் தங்கிக் கெடுதலற்ற பிரணவ மந்திரத்தின் பழமையான பொருளின் செறிவெல்லாவற்றையும் (ஐயந்திரிபற) செவியறிவுறுக்கக் கேட்டனன்.

(வி - ம்.) தாழ்வயின் வைகுபு கேட்டனன் என்க. சதுர்பட - மேம்பாடுற.

(117)

 தனக்குத்தா னேமக னாகிய தத்துவன்
 தனக்குத்தா னேபொரு தாவருங் குருவுமாய்த்
 தனக்குத்தா னேயருட் டத்துவங் கேட்டலும்
 தனக்குத்தா னிகரினான் றழங்கிநின் றாடினான்.

(இ - ள்.) தனக்கு மகனாகிய தத்துவ வடிவமாகிய முருகப்பெருமான், தனக்கு ஒப்பற்ற கெடுதலில்லாத பரமாசாரியனாகித் தனக்குச் செவியறிவுறுத்த உண்மை நிலையைக் கேட்டவளவில் தனக்குத்தானே சமானமானவனாகிய சிவபெருமான் முழக்கஞ்செய்து நின்று நடனம் செய்தனன்.