பக்கம் எண் :

திருநாட்டுப் படலம்25

தாமரை; குரு - நிறம்; சூழல் - இடம்; திருஇயல் கடைசிமார் - அழகமைந்த மள்ளப் பெண்கள்.

(25)

 தளைசெறி வயலிற் சென்று தக்கன செய்து பின்னர்
 விளைவினைக் கொய்து மோட்டு வியன்களத் தேற வுய்த்து
 முளைதகை கருப்பங் காடு முழுவது மெறிந்தங் காட்டித்
 திளைமகிழ் களமர் தங்கள் செயற்கையும் படைத்த தாங்கண்.

(இ - ள்.) அவ்வெள்ளமானது மருதநிலத்தின்கண் பந்தித்தல் செறிந்த செய்களினிடத்துச் சென்று மேட்டைப் பள்ளமாக்கலும், பள்ளத்தை மேடாக்கலுமாகிய தகுதியான தொழில்களைச் செய்தலானும் பின்னர் வயலின் கண் விளைந்த நெற்கதிர் முதலிய விளைவுகளை யரிதலானும் அரிந்தவற்றை உயர்ந்த பெரியகளத்தின்கண்ணே ஏறும்படி சேர்த்தலானும் முளைத்தலோடு அழகு பொருந்திய கருப்பஞ்சோலைகள் எல்லாவற்றையும் ஒடித்து அசைத்தலானும், மகிழ்ச்சியில் மூழ்குகின்ற களமர்களின் செய்கையையும் பொருந்தியது.

(வி - ம்.) நன்செயிற் சென்று ஆண்டு செய்யத்தக்க தொழிலைச் செய்து விளைவினை யறுத்துக் களத்திற்கொணர்ந்து கருப்பங்காடுகளை வெட்டி ஆலையிலாட்டுதல் களமர் செயலாகலின் அச்செயலை இந்நதியு முடைத்தாதல் காண்க. தளை - நான்கு வரம்பு சேர்ந்து வட்டித்தவயல்; வரம்புமாம்; உழவர் தக்கன செய்தல் மேட்டைப் பள்ளமாக்கப் பள்ளத்தை மேடாக்கல், சேடை செய்தல், உழுதல், எருவிடுதல், நீர்பாய்ச்சல்; நதிதக்கன செய்தல், வரம்பை நிறைத்தல், வரம்பை யழித்தல் பள்ளத்தை மேடாக்கல் மேட்டைப் பள்ளமாக்கல்; எறிதல் நதியைக் குறிக்கும்பொழுது முறித்தலெனவும் களமரைக் குறிக்கும் பொழுது வெட்டியெனவும், ஆட்டி யென்பது நதியைக் குறிக்கும்பொழுது அலைத்து என்றும், களமரைக் குறிக்கும்பொழுது ஆலையிலாட்டி எனவும் பொருள் கொள்க. மகிழ்திளை களமர் தங்கள் என மாற்றுக. மகிழ் - முதனிலைத் தொழிற்பெயர் - ஏழாவதன் றொகை.

(26)

 மேற்றிசைத் தொடர்பி னோடும் விரிகடற் பயிற்சி காட்டித்
 தோற்றெழி னாகச் சூழற் றுன்னுமத் தொடர்புங் காட்டி
 யேற்றெதிர் மகர முந்தி யெந்நில வளனும் போற்றி
 யாற்றல்சால் வருண னென்ன வணைந்தது கானற் பாங்கர்.

(இ - ள்.) அவ்வெள்ளமானது கடற்கரை யோரத்து மேற்குத் திசைக்கணின்று போந்த தொடர்ச்சியினோடும் விரிந்த கடலின்கண் பெருகுதலைக் காட்டுதலானும், கண்டார்க்கு அழகைத் தோற்றுவிக்கும் புன்னைமரச் சோலைகளிற் பொருந்தும் சம்பந்தத்தையுங் காட்டுதலானும் எதிர்க்கின்ற ஏறாகிய சுறாமீன்களைத் தள்ளுதலானும் ஏனைய நான்கு நிலங்களின் வளங்களையெல்லாம் பாதுகாத்தலானும் அந்நிலத்ததி தெய்வமாகிய வல்லமை மிக்க வருணனென்றுஞ் சொல்லும்படி பொருந்தியது.

(வி - ம்.) மேற்றிசை யுரிமையும் கடற்கிறைமையும் பூண்டு வலைவளந் தப்பின் அந்நிலமாக்கள் புன்னைச் சூழலிற் சுறாமுண் மருப்பை