பக்கம் எண் :

வீராட்டகாசப் படலம்255

 அன்றுடங் கணைந்தோர் படிந்துவேற் கரத்தா
           சானொடு வீராட்ட காசத்
 தொன்றுநா யகனைப் பணிந்தெவற் றானு
           மொழிப்பரு முடலுயிர்ப் பிணிகள்
 மன்றநீத் தெண்ணும் வரங்கள்பெற் றுய்ந்தார்
           மதித்துறி னளவினிற் படாரால்
 பின்றையு மதிற்றோய்ந் திற்றைநாள் காறும்
           பெரும்பிணி யிரித்தவர் மாதே.

(இ - ள்.) அன்று இறைவனுட னொருசேரச் சென்ற தேவர் முதலியோர் அச் சிவகங்கையின்கண் மூழ்கித் திருக்கரத்தில் வேற் படையை யுடைய பரமாசாரியனாகிய குமாரப் பெருமானோடு வீராட்ட காசத்தின்கட் பொருந்தியுள்ள தலைவராகிய சிவபெருமானை வணங்கி எவ்வாற்றானும் நீக்குதற்கரிய உடலுயிர்களைப் பிணித்துள்ள நோய்களை நிச்சயமாக நீக்கித் தாங்களெண்ணிய வரங்களை யெல்லாம் பெற்றுய்ந்தார்கள். பின்னரு மச் சிவகங்கையின்கண் மூழ்கி இற்றைநாள் வரையும் பெரிய பிணிகளை நீக்கியவர்களை எண்ணப்புக்கால் அளவினிலகப் படுவாரல்லர்.

(வி - ம்.) பிணியிரித்தவர் அளவினிற் படாரெனக் கூட்டுக. மதித்துறின் எண்ணப்புகின்.

(127)

 உட்டுகண் முழுதும் பரிந்துமெய்ப் பொருளி னொருக்கிய வறிவினீர் தழங்கி
 நட்டநின் றியற்றும் வீராட்ட காச நாதனார் சிறப்பெடுத் துரைத்தாம
 சட்டமூ வுலகும் போற்றவீற் றிருக்குஞ் சாமிநா தனுமகிழ் சிறந்தாங்
 கெட்டுரு வுடையோ னருட்குறி நிறுவி யியற்றுபூ சனைத்திறங கிளப்பாம்.

(இ - ள்.) அகத்தின்கண்ணுள்ள குற்றமுழுதும் நீங்கி உண்மைப் பொருளாகிய சிவத்தின்கன் ணடங்கின அறிவினையுடைய முனிவர்களே! நிலைபெற்றுத் திருநடனத்தைச் செய்கின்ற வீராட்டகாசத்தின் கண்ணுள்ள தலைவர் சிறப்பை எடுத்துச் சொல்லினாம். விரைய மூவுலகத்தின்கண் உள்ளாரும் போற்றும்வண்ணம் வேறொருவர்க்கில்லாத சிறப்புடனெழுந்தருளியிருக்கும் சாமிநாத னென்னும் பெயரினை யுடைய பரமாசாரியனும் அட்டமூர்த்தங்களைத் தனக்குத் திருவுருவாக வுடையோனாகிய சிவபெருமான் திருவருளடையாளமாகிய சிவலிங்கத்தை நிறுவிச் செய்த பூசனை வகையைச் சொல்வாம்.

(வி - ம்.) எட்டுரு - பூதமைந்து, ஆன்மா, சந்திரன், சூரியன். இம்மூன்றோடு உருவம் எட்டு. நட்டம் - நடனம். சட்ட - விரைய. இதனைச் "சட்ட விக்கதவந்திறப் பிம்மினே" என்ற தேவாரத்தானறிக. அருட்குறி - சிவலிங்கம். உட்டுகள் - அகத்தின்கண் உள்ள குற்றம்.

(128)

வீராட்டகாசப் படலம் முற்றிற்று.

ஆகத் திருவிருத்தம்

569