பக்கம் எண் :

256குமரேசப் படலம்

குமரேசப் படலம்

 யாவருக்கு மெப்பொருட்கு மின்பமெய்த நின்றவர்
 மூவருக்கு மின்புறுத்து மூவிருதி றத்தரும்
 தாவிலின்ப மெய்தநின்ற தத்துவத்த னென்பவால்
 ஒவிலின்ப வுருவமான வொளிர்குமார வீசனை.

(இ - ள்.) ஒழிவில்லாத இன்பமே திருவுருவாகவுடைய விளங்குகின்ற குமரேசனை (அதிபாதகம், மாபாதகம் முதலிய பாவங்களைச் செய்த) யாவரும் (ஓரறிவு முதல் ஐயறிவீறாயுள்ள) எவ்வகைப் பொருள்களும், (இன்பமெய்த லொருகாலத்து மின்றாமாதலின்) அவர்களு மப்பொருள்களும் இன்பத்தினை யடையத் (துறவறத்தின்கண்ணே) நிலைபெற்ற பெரியோர்கள், பிரளயாகலர் முதலிய மூவருக்கும் இன்பத்தினைச் சேர்க்கின்ற அறுவகைச் சமயக் கடவுளரும் கெடுதலில்லாத சுத்த புவன போகங்களையடைய நிலைபெற்ற (தன்னியல்பில் நிற்றலாகிய) உண்மை வடிவின னென்று சொல்வார்கள்.

(வி - ம்.) மூவருக்கு மென்பதற்கு - பிரமா, விட்டுணு, உருத்திரன் என்ற மூவருக்குமெனவும், புறப்புறம், புறம், அகப்புறமாகிய மூன்று சமயத்தார்க்கு மெனவும் பொருள் கூறுவாருமுளர். குமர வீசன் - குமரனாலருச்சிக்கப்பட்ட ஈசன். "அறுவகைச் சமயத்தோர்க்கும் அவ்வப் பொருளாய் நிற்பவன் சிவபெருமானொருவனே யாதலின் "மூவருக்கு மின்புறுத்தும் மூவிருத ரத்தரும்" என்றார். "அறிவின் மிக்க அறுவகைச் சமயம் அவ்வவர்க்கங்கே என்னுந் திருப்புன்கூர் தேவாரத்தானு மறிக. "யாவருக்கும் எப்பொருட்கும்" இதிலுள்ள நான்கா முருபுகள் "எல்லா வுருபொடுங் கொள்வோ னெழுமே" என்ற விதிப்படி எழுவாய்க்கண் வந்தன.

(1)

வேறு

 காய மல்கமர ராண்மைதபு காரி யுதரம்
 போயி ருந்துபுற னேகுபுக ரென்ன முகிறோய்
 வேயி னின்றமணி விண்டுவெளி வந்து திவளும்
 மீயு யர்ந்தகணி காசலவி சாக னொருநாள்.

(இ - ள்.) ஆகாயத்தின்கண் நிறைந்த தேவர்கள் வலிமையை நீக்குகின்ற வயிரவக்கடவுள் வயிற்றின்கண்ணே போய்த் தங்கி வெளியே செல்கின்ற சுக்கிரனென்று சொல்லும் வண்ணம் மேக மண்டலத்தை யளாவிய மூங்கின் மரங்களினுள்ளே நிலைபெற்ற முத்துக்கள் (அவ் வேய் வெடித்தலால்) வெளியில்வந்து விளங்குகின்ற மிகவும் மேலோங்கிய தணிகைமலையின்க ணெழுந்தருளி விசாகனாகிய முருகக் கடவுள் ஒருபகல்.

(வி - ம்.) காயம் - ஆகாயம்; முதற்குறை. காரி - வயிரவன். புகர் - சுக்கிரன். விண்டு - வெடித்து. திவளும் - விளங்கும். வயிரவர் புகரினை விழுங்கி யமரரைக் காத்த கதை காசிகண்டத்தா னறிக.

(2)