பக்கம் எண் :

258தணிகைப் புராணம்

 பன்ம ணித்திரள்கொ ழித்துமலர் பம்பி யினவண்
 டன்ன நேமியும கன்றிலும ணிந்தொ ளிர்தலான்
 மன்ன டுக்கன்மகள் வண்கடித டத்த ணிதரும்
 மின்ன லங்குமணி மேகலைவி ழைந்த ததுவே.

(இ - ள்.) பலவகை நிறம் பொருந்திய மணியின் கூட்டங்களைச் சொரிந்து மலர்கள் நிறையப்பெற்றுக் கூட்டமாகிய வண்டுகளும், அன்னப் பறவைகளும், சக்கரவாகப் புள்ளும், அன்றிலும் அழகுசெய்து விளங்குதலான் நிலைபெற்ற தணிகைமலையாகிய பெண்ணின் வளப்பம் பொருந்திய அரையின்க ணணிந்த மின்னலோடுகூடி யசைகின்ற மேகலாபரணத்தை யந்நதியொத்தது.

(வி - ம்.) மணியினையும், மலரையும் மேகலையாகவும்; வண்டு அன்ன முதலியவைகளி னொலியை மேகலை யொலியாகவும் கொள்க. நேமி - சக்கரவாகப் பறவை. மகன்றில் - நீரில்வாழும் ஒருவகைப்புள். இதனைப் "பூவிடைப்படினும் யாண்டுகழிந்தன்ன - நீருறை மகன்றிற் புணர்ச்சிபோல" என்னுங் குறுந்தொகைச் (57) செய்யுளானும் "அன்னநேமியு மகன்றிலுமணிந்து" எனும் சிந்தாமணி (பதுமை 85) செய்யுளானு மறிக. அலங்குதல் - அசைதல். கடிதடம் - அரை; இடக்கர்மொழி, அது - ஈண்டு நதி.

(6)

 ஆம்ப லுற்பலம டுக்கிதழ்ந றுங்க மலமும்
 தாம்ப யின்றனத யங்கியிரு போது மலரா
 யாம்பி றங்குவர மீகெனவெ னைத்து லகமும்
 ஓம்பி யாக்குமுரு கற்பணிய வுற்ற னபொரூஉம்.

(இ - ள்.) அந்நதியின்கட் பொருந்தியனவாகிய அல்லியும் நீலோற் பலமும் அடுக்கிய இதழ்களோடுகூடிய வாசனையுள்ள தாமரை மலருமாகிய இவைகள் பகலிரவாகிய இருகாலத்தும் மலர்ந்து யாங்கள் விளங்குதற்கேதுவாகிய வரங்களைக் கொடுக்கக் கடவாயென்று எல்லா வுலகங்களையும் காத்துப் படைக்கும் குமரப்பெருமானை வணங்கவுற்ற தன்மையை யொக்கும்.

(வி - ம்.) மலரா - மலர்ந்து. ஈக + என - ஈகென. அகரங்குறைந்து நின்றது செய்யுள் விகாரம் தொகுத்தல்.

(7)

 இருசு டர்க்கிரண மெய்தலறி யாதி ரசதப்
 பெருவ ரைக்கணொரு பெற்றியினி ருந்த மலர்கள்
 இருதி றத்தனவி ருப்பனகள் கன்னி மைகழீஇ
 மருவு மன்பரைம ணந்துபிரி மங்கை யர்பொரூஉம்.

(இ - ள்.) சூரிய சந்திரர்களின் கிரணங்கள் பொருந்துதலறியாமல் பெரிய வெள்ளிமலையின்கண் (தங்கட்கேற்பட்ட காலங்களில் மலர்தலும் குவிதலுமில்லாது) எக்காலத்துமொரு பெற்றித்தாக விருந்த மலர்கள் (இத்தணிகைக்கண் வந்து) தாமரை முதலியன பகற்காலத்தில் மலர்தலும், குவளை முதலியன கூம்பலும்; குவளை முதலியன இராக்காலத்தில