மலர்தலும், தாமரை முதலியன கூம்பலுமாகிய இரண்டு தன்மையையுடையனவாகி யிருப்பவைகள் கன்னிப்பருவம் நீங்கியூழான் வந்து பொருந்திய அன்பரைக்கூடிப் பின் பிரிவை யடைகின்ற மங்கையரை ஒக்கும். (வி - ம்.) இருதிறமாவன - பகற்காலத்தில் மலர்தல், ராக்காலத்தில் கூம்பல். இருப்பனகள் - விகுதிமேல் விகுதி; இதனைக் "கைப் பொருள் கொடுத்தும் கற்றல்கற்றபின் கண்ணுமாகும் - மெய்ப்பொருள் விளைக்கும் நெஞ்சின் மெலிவிற்கோர் துணையுமாகும் - பொய்ப்பொருள் பிறகள்" எனும் சிந்தாமணிச் (கனக 39) செய்யுளானறிக. கன்னிமை - ஒருவராலும் தீண்டப்படாமற் பூத்திருத்தல். இம்மலர்கள் கயிலைக்கண் ஒரு தன்மையாய்ப் பூத்திருத்தல் ஒருவராலும் தீண்டப்பெறாமல் பூப்பெய்தியிருந்த கன்னிமைப்பருவமாகவும், தணிகைக்கண் வந்து சூரிய சந்திரர்களைக் கண்டு மலர்தல் கன்னிமைத்தன்மை நீங்கி நாயகனைக் கூடுதலாகவும் இவர்கள் நீங்கக்குவிதல் நாயகனைப் பிரிதலாகவும் கொள்க. கயிலையிலிருத்தல் கன்னிமைப்பருவமாகவும் தணிகைக்கண் வந்து கன்னிமை கழிந்த மணப்பருவமாகவும் இவ்விருவர் பிரிவை நாயகர் பிரிந்த பருவமாகவும் கொள்க. இஃது உவமைச் சிலேடையணி. (8) | ஓதி மம்புடையி ருப்பவொளிர் செங்க மலம்வீழ் | | மாதர் வண்டுபொடி மல்கியப ராச ரன்வளர் | | வேத மந்திர விழுத்தழல்வி ரைந்து குமவன் | | தாதை யர்க்கொலை புரிந்ததகு வோர்கி ளைபொரூஉம். |
(இ - ள்.) அன்னப்பறவை பக்கத்தின்கண்ணே தங்க ஒளிபொருந்திய செந்தாமரை மலரின்கண் (தேனுண்ண) மொய்க்கின்ற அழகிய வண்டுகள்; பராசரமுனிவன் வேதமந்திரங்களால் வளர்த்த நீறு நிறைந்த யாகாக்கினியின்கண் (வேதமந்திரங்களால்) விரைவாகக் கொண்டுவந்து சொரியும் அப்பராசரன் தந்தையர்களைக் கொலைசெய்த அசுரர்கள் கிளையினை ஒக்கும். (வி - ம்.) அன்னத்தை யாகத் தலைவனாகவும், கமலத்தை யாகாக் கினியாகவும் வண்டுகளை யசுரர்களாகவும் கொள்க. மாதர் - அழகு. உகும் என்னும் பெயரெச்சம் தகுவோர் என்னும் பெயர்கொண்டு முடிந்தது. இக் கதையினைத் திருவானைக்காப் புராணம் பராசரன் வழிபடு படலத்திற் காண்க. மல்கிய என்னும் பெயரெச்சம் தழலென்னும் பெயர்கொண்டு முடிந்தது. பராசரன்வளர் வேதமந்திரப் பொடிமல்கிய விழுத்தழலெனக் கூட்டுக. (9) | மேல வாந்தலைய கீழ்த்தலைய கீழ்த்த லையன | | மேல வாகுநிழ றோற்றுவிரி நீர்வி னையினால் | | மேல வாம்பொருள்கி ழக்கனகி ழக்கி டுபொருள் | | மேல வாஞ்செய றெளிக்குமொரு சான்று விழையும். |
(இ - ள்.) மேலே தலையுள்ளனவாகிய பொருள்களெல்லாம் கீழே தலையுள்ளனவாகிய பொருள்களாகவும், தலைகீழாகக் காட்டியன வாகிய பொருள்களெல்லாம் மேலே தலையையுடையனவாகும் வண்ணம் |