பக்கம் எண் :

குமரேசப் படலம்263

 ஆண்டுறுத் தும்பரி னவிர்பொற் பட்டினால்
 காண்டகு விதானங்கள் கற்பித் திட்டனன்.

(இ - ள்.) தூண்கடோறும் நீண்ட உறைகளையிட்டுத் தொங்குகின்ற காய் மாட்சிமைப்பட்ட மெல்லியவாழையும், நீண்ட கரும்பும், கமுகமரங்களும் ஆகியவற்றை ஆண்டுச் சேர்த்து மேலே விளங்குகின்ற அழகிய பட்டினால் யாவருங் காணத்தக்க மேற்கட்டியும் செய்தான்.

(வி - ம்.) உறை - மேற்போர்வை; இது தூணிலழுக்கடையாம லிடப்படுவது. "தூணுறை பொதிவாரும் தோரணம் நடுவாரும்" என்னும் காஞ்சிப் புராணம் அகத்தியப்படலச் செய்யுளா னிதனை அறிக.

(18)

 ஆடகத் தகடுக ளடுத்த கீழ்நிலம்
 பாடமை மணித்துகட் பசும்பொற் சுண்ணநீர்
 நாடரு விரைகலந் தொழுக்கி நன்மணி
 தோடவிழ் மலரறு கரிசி தூவினான்.

(இ - ள்.) பொற்றகடுகளாற் பொருந்திய கீழிடத்தின்கண் பெருமை பொருந்திய அரதனப்பொடிகளும், பசியபொற்சுண்ணமும், ஆராய்தற்கரிய வாசனையும் நீரிற்கலந்து தெளித்து நல்ல முத்துக்களையும், மலரையும் அறுகையும் அரிசியையுந் தூவினான்.

(வி - ம்.) ஆடகம் - பொன். கீழ்நிலம் - கீழிடம். பாடமை - பெருமையமைந்த. தோடு - இதழ்.

(19)

 பொன்னரி மாலையும் போதிற் றொங்கலும்
 மின்னகு பன்மணி விராய கோவையும்
 துன்னிய கனிகளுந் துலங்கு மாடியும்
 என்னவு மணிபெற வெங்குந் தூக்கினான்.

(இ - ள்.) பொன்னாலரிந்து செய்யப்பெற்ற மாலையும், பூக்களாலாய மாலையும், ஒளி விளங்குகின்ற பலமணிகள் கலந்து செய்யப் பெற்ற மாலையும் விளங்குகின்ற கண்ணாடியுமாகிய எவையும் அலங்காரம்பெறச் செய்தான்.

(வி - ம்.) போது - பூ. தொங்கல் - மாலை. கோவை - மாலை.

(20)

 தோரண மெங்கணுந் தொடரிப் பல்கொடி
 காரண விசும்பெலாங் கஞற்றிப் பாலிகை
 பூரண கும்பங்கள் பொலிந்த வேதிகை
 ஏரண வியவிளக் கினமு மீட்டினான்.

(இ - ள்.) மாவிலையாலாகிய தோரணங்களை எவ்விடத்தும் தொடுத்துப் பலவகைப்பட்ட நிறங்களையுடைய கொடிகளை மேகத்தை யண்ம ஆகாயத்தி னிடமெல்லாம் நெருங்கக்கட்டி, முளைப்பாலிகையும், நிறைகுடங்களும் பொலிவுபெற்ற பூசைமேடையினிடத்து அழகு பொருந்திய தீபங்களையும்
சேர்த்தினான்.