(வி - ம்.) தொடரி - தொடுத்து. காரணவு விகாரம். கார் - மேகம். ஏனைப் பூதங்கட்குக் காரணமான விசும்புமாம். வேதிகை - பூசைமேடை. ஏர் - அழகு. (21) | வட்டகை வலம்புரி வளைபொற் பாசனம் | | கொட்டொளிப் படலிகை கொடிய கஞ்சுடர் | | இட்டசைப் பனவெழி லாடி யாதியா | | முட்டற யாவையு முறையு யிர்த்தனன். |
(இ - ள்.) அருக்கியம் கூட்டும் பாத்திரமும், வலம்புரிச்சங்கமும், வளைந்த பொன்னாலாகிய அபிடேக நீர் வைக்கும் பாத்திரமும், ஒளியை வெளியிடுகின்ற தட்டுக்களும், பூந்தட்டுக்களும், சுடரிட்டு அசைக்கப் படுவனவாகிய அழகு பொருந்திய கண்ணாடியும் முதலாகக் குறைவற (பூசைக்கு வேண்டுமுபகரணங்கள்) எல்லாவற்றையும் முறையே படைத்தனன். (வி - ம்.) வட்டகை - அருக்கியஞ்சேர்க்கும் பாத்திரம். வலம்புரி வளை - வலம்புரிச்சங்கம். பாசனம் - பாண்டம், இதனைப் "பாசன மென்ப சுற்றம் பாண்டமுண்கலமும் பன்னும்" என்னும் நிகண்டானறிக. படலிகை - பூந்தட்டு; இதனை "மணியியற் பாலிகை யனைய மாச்சுனை - யணிமணி நீண்மல ரணிந்த தாயிடை - யிணைமலர்ப் படலிகை போலு மீர்ம்பொழில் - கணையுமிழ் சிலையினாய் கண்டு சேறியே" என்னும் சிந்தாமணி (பதுமை 45) செய்யுளானு முரையானு முணர்க. கொடியகம் - தட்டு; கோடிகம் என்பதன் விகாரமெனினுமாம். (22) | எண்ணெயா மலகமா மஞ்சள் பாறயிர் | | தண்ணெய்தேன் வேழத்தின் சாறங் கைந்தென | | நண்ணமிர் திரதங்க ணாளி கேரநீர் | | அண்ணலங் கனியரு விரையு மார்த்தினன். |
(இ - ள்.) எண்ணெயும், நெல்லியும், நென்மாவும், மஞ்சளும், பாலும், தயிரும், குளிர்ந்த ஆனெய்யும், தேனும், கரும்பின் சாறும், பஞ்சாமிர்தமும், பழச்சாறுகளும், இளநீரும், அழகிய கனிகளும், அருமையான வாசனைப் பொருள்களும் பெருமை பொருந்திய முருகப்பெருமான் நிறைத்தனன். (வி - ம்.) ஆமலகம் - நெல்லி. மா - நென்மா. வேழம் - கரும்பு. ஐந்தென நண்ணமிர்து - பஞ்சாமிர்தம். இரதங்கள் - பழச்சாறுகள். (23) | தேசவிர் கலைகளுந் தெய்வ மாலையும் | | பூசமை சாந்தமும் புகையுஞ் சுண்ணமும் | | காசவிர் கலன்களுங் கனிந்த பல்சுவை | | நேசமல் கமிர்தமு நிரைத்திட் டானரோ |
(இ - ள்.) ஒளி விளங்குகின்ற பட்டுடைகளும், தெய்வ மணங்கமழ்கின்ற மாலைகளும், பூசுதற்கமைந்த சந்தனங்களும், நறும்புகையும், |