பக்கம் எண் :

குமரேசப் படலம்265

பொற்சுண்ணமும், மணிகள் பதிக்கப்பெற்று விளங்குகின்ற அணிகலன்களும், பலவகைச்சுவை முதிர்ந்த தேவாமிர்தமும் வரிசையாகக் கொணர்ந்து வைத்தனன்.

(வி - ம்.) சூர் - சூரன்; சொல்லாலஃறிணை, பொருளாலுயர்திணை. விழுமம் - துன்பம். வீழ்த்து : காரணப்பொருளில் வந்த வினையெச்சம். பாரிடம் - பூதம். பரித்தல் - தாங்கல்.

(25)

வேறு

 கள்ளவிழ்பன் மலர்கஞலுங் கயிலாய கங்கையெனும்
 தெள்ளுதிரை மணிகொழிக்குந் திருத்தநீர் புகுந்தாடி
 ஒள்ளியவே றுடையுடுத்திட் டொளிர்பூதி முழுதணிந்து
 வள்ளல்விழிக் கதித்தமணி வடம்பலவுந் தாங்கினான்.

(இ - ள்.) தேன் விரியப்பெற்ற பல மலர்களுஞ் செறிந்த கயிலாய கங்கையென்று சொல்லுந் தெள்ளிய வலைகள் முத்துக்களைச் சொரிதற்கிடமாகிய தீர்த்தத்தின்கண்ணே புகுந்து மூழ்கி ஒளிபொருந்திய வேறுடையை யணிந்து ஒளிபொருந்திய நீற்றினை யுடன்முற்றிலும் பூசி வரையாது கொடுக்குந் தலைவனாகிய இறைவன் கண்ணின்றுந் தோன்றிய மணிமாலை பலவற்றையு மணிந்தான்.

(வி - ம்.) கதித்த - தோன்றிய. கஞலும் - நெருங்கிய. விழிக்கதித்த மணிவடம் - கண்மணி மாலை (உருத்திராக்கமாலை.)

(26)

 பல்லியம்பல் கணமியம்பப் பண்ணவர்பல் லாண்டிசைப்ப
 மெல்லியல்விண் ணரமகளிர் மின்னினுடங் கினர்நடிப்பச்
 சொல்லமிழ்த மிடற்றிசையுஞ் சுடர்மணியாழ் நரப்பிசையும்
 கல்லிளகப் பரந்திசைப்பக் கதிர்மணிக்கோ யிலையடுத்தான்.

(இ - ள்.) வாத்தியங்கள் பலவற்றையும் பலவகைப்பட்ட கணங்களொலிக்கவும், தேவர்கள் பல்லாண்டு பாடவும், மென்மைத் தன்மையுடைய தேவமங்கையர் மின்னலைப்போலத் துவண்டு நடனஞ் செய்யவும், சொல்லமிர்தமாகிய மிடற்றுப் பாடலும், யாழ் நரம்பினிசையும்