(இ - ள்.) திருவடி, திருமுகம், திருமுடியாகிய மூன்றற்கு முறையே கொடுக்கின்ற பாத்தியம், ஆசமனம், அருக்கிய முதலியவைகளை யெல்லாம்; அபேதமாகிய அருளையுங்கடந்த பெரிய மூலமந்திரத்தினா லமைத்து அவ்விடத்து ஆசனம் மூர்த்தி மூலமென்னு மூன்றினையும் அத் திருவெழுத்தினாலே யமைத்து ஆன்மாக்களெல்லாம் ஆணவமாகிய குற்றத்தினின்றும் நீங்கக் கொத்துக்களோடுகூடிய மலர்களால் அருச்சனை செய்தான். (வி - ம்.) பேரெழுத்து - மூலமந்திரம் : முத்திபஞ்சாக்கர மென் பாருமுளர். உயிரெல்லா மேதமற வருச்சித்தானெனக் கூட்டுக. இறைவன் செய்யுந் தொழில்களெல்லாந் தன்பொருட்டன்றி ஆன்மாக்களின் பொருட்டே யாகலின் "உயிரெல்லா மேதமற வருச்சித்தான்" என்றார். இணர் - பூங்கொத்து. (33) | அளியாகி யொளியாகி வெளியாகி யளவாகும் | | களியாத பொருட்கலப்பிற் கதித்தசுகத் தப்புறமாய் | | விளியாத சுகம்பெருக்கி விளங்குதிரு வுருக்குளிர்ப்பத் | | தெளியாமுந் தயிலமுதற் செறிவனைத்து மாட்டினான். |
(இ - ள்.) கருணையே திருவுருவமாகி, ஒளிவடிவமாகி, பரமாகாய சொரூபமாகி (உயிர்கள் காண்டற்கு) அளவாகிய மயங்காத பொருட் கலப்பின்கண் ணுளவாகு மின்பத்திற் கப்பாற்பட்டுள்ளதாய் எஞ்ஞான்றுங் கெடாத இன்பத்தினை மிகச்செய்து விளங்குகின்ற திருவுருவமானது குளிர்ச்சியடையத் தெளிந்தநீரும் எண்ணெய் முதலியவாகச் செறிந்த அபிடேகப் பொருள்க ளெல்லாவற்றானும் அபிடேகஞ் செய்தான். (வி - ம்.) ஆகி, ஆய், பெருக்கி யென்னும் வினையெச்சங்கள் விளங்கென்னும் வினைத்தொகை முதனிலையோடு முடிந்தன. களியாத - மயங்காத. ஆம் - நீர். ஆகுமென்னும் பெயரெச்சமும், களியாத வென்னும் பெயரெச்சமும் பொருளென்னும் பெயரோடு தனித்தனி சென்றியைந்தது. உயிர்கள் காண்டற்குரிய பொருளாகலின் அளவாகும் பொருளென்றார். மாயாகாரியமாய போக்கியப் பொருளுக் கப்பாற்பட்ட சுகமென்பார், "பொருட்கலப்பிற் கதித்தசுகத் தப்புறமாய்" என்றார். கதித்த - தோன்றிய. (34) | விழைதகுமென் கலிங்கத்தான் மெய்யீரந் தபப்புலர்த்தித் | | தழையொளிநாண் கோவணம்விற் றதைகதிர்ப்பூம் பட்டணிந்து | | குழைகலவைச் சேறெங்குங் கொட்டிமணத் துகளட்டி | | மழைதவழ்வ தெனவிரைகண் மடுத்தபுகை தவழ்வித்தான். |
(இ - ள்.) யாவரும் விரும்புந் தகுதியமைந்த திருவொற் றாடையாற் றிருமேனியி னீரத்தை உலரச்செய்து ஒளிதழைக்கின்ற அரைஞாணும் கோவணமும், மிக்க வொளியோடுகூடிய பட்டினையுஞ்சாத்திக் குழைத்த கலவைச் சாந்தினைத் திருமேனியெங்குங் கொட்டி வாசனைப் பொடிகளையப்பி மேகந்தவழ்வதுபோல வாசனை நிறைத்த புகையினைத் தவழச்செய்தான். |