கலக்குதலானும், அவ் வுப்பங்கழியை நீத்து நெடிய கடலின்கட் குளித்தலானும், (தான் செல்லும் விரைவால்) நீர்க்கீழுள்ள முத்தங்களையும் பவளங்களையும் மேலே கொணர்தலானும், கடலிலுளவாகிய மரக்கலங்கள் பலவற்றையும் அலையாகிய கையாற் றள்ளுதலானும், தன்னுள் மூழ்கிய பரத்திமார் தழுவப்பொருந்துதலானும், கொடிய கொலைத் தொழிலையுடைய பரதவரது கொள்கையையும் பொருந்தியது. (வி - ம்.) உப்பை விளைவித்து உப்பங்கழியைக் கலக்கி நீந்தி விளையாடிக் கடலில் மூழ்கி முத்தினையும் பவளத்தினையுங் குளித்து மேலே கொணர்ந்து மரக்கலங்களை யியக்கிப் பரத்தியரைப் புல்லல் பரதவர்க் கியல்பாகலின் இந்நதியு மச்செயலை யுடைத்தாதல் காண்க. களியுப்பு - களிமண்ணோடு கூடிய வுப்பு; மெத்தி - நிறைத்து; கீழ்நீர் - நீர்க்கீழ் என மாற்றுக. படுகலன் பலவுந் தள்ளியென்பதற்கு - நதியைக் குறிக்கும் பொழுது கடலிலுண்டாகிய மரக்கலங்களைத் தள்ளி யெனவும் பரதவரைக் குறிக்கும்போது பொருந்திய ஆபரணங்களை நீக்கியெனவும், பரத்தியர் தோயப் புல்லி யென்பதற்கு நதியைக் குறிக்கும்பொழுது பரத்திமார் தன்னுள் மூழ்க அவரைப் பொருந்தியெனவும், பரதவரைக் குறிக்கும்பொழுது அவர் தழுவப் பொருந்தியெனவும் பொருள் கொள்க. (29) | | கலையொடு வாளம் பற்றிக் கன்னியாய்க் குரவம் போது | | | தலைமலைந் தெயிற்றி மாராய்த் தனுவொடா றலைத்து மாந்தர்க் | | | குலைவுசெ யெயின ராயு முருப்பவிர் முரம்பு தோறும் | | | அலைதிரைப் பாலி நீத்த மமிழ்தென வொழுகிற் றம்மா. |
(இ - ள்.) கலைமானையும் வாளாயுதத்தையும் இழுத்துச் சேறலால் துர்க்கையாகியும், குராமலர்களைத் தன்னிடத்தணிந்து செல்லுதலால் அந்நிலப் பெண்களாகிய எயிற்றிமாராகியும், விற்களோடு வழியிலுள்ள பொருள்களையும் பறித்துச் சேறலான் மக்களுக்கு வருத்தஞ் செய்கின்ற வேடராகியும், வெப்பமிகுகின்ற பாலையிடந்தோறும் கரையை யலைக்கும் திரையையுடைய பாலிநதியானது அமிர்தமென்று சொல்லும்படி பெருகிய தென்க. (வி - ம்.) தனு நதியைக் குறிக்கும்போது வில்லெனவும் வேடரைக் குறிக்கும்போது ஆற்றெதிர்ப்பட்டாரது உடலெனவும்; ஆறலைத்தல் நதியைக் குறிக்கும்போது வழிகளைக் கெடுத்தலெனவும் வேடரைக் குறிக்கும்போது வழிச்செல்வோர் பொருள்களை அபகரித்தலெனவும் பொருள் கொள்க. முரம்பு - கல் விராயநிலம்; அஃதாகுபெயராய்ப் பாலைநிலத்தை யுணர்த்திற்று. வாளம் - அம் சாரியை. (30) | | முழங்கு சேய்நதி நந்தினி முகலியே யாதிப் | | | பழங்கண் டீர்நதி பலவுமிப் பாலியி னோடுந் | | | தழங்கு நீர்கொடு தலையளி புரியுநா னிலத்து | | | வழங்கு மைந்திணை வளஞ்சிறி துரைத்திடப் படுமால். |
|