பக்கம் எண் :

270தணிகைப் புராணம்

மிகுந்த பாக்கு வெற்றிலையின் சுருளைக் கொடுத்து இரத்தின தீபத்தையும், தூபத்தினையும் பணிமாறிக் குற்றமற்ற பலவாகிய தீபவாராதனை யுஞ்செய்து, கண்ணாடி சாமரை முதலிய பதினாறுவகை யுபசாரங்களை யுஞ்செய்து, அன்புநிறைந்த (இறைவன் நிலையைக்கூறும் தேவார முதலிய பாக்களால்) புகழைப் பரவச்செய்து வலமாகவந்து பூமியின் கண் விழுந்து வணங்கி எழுந்துநின்றான் அப்பொழுது.

(வி - ம்.) பூசுபுனல் - கரசுத்தி முதலியன செய்கின்ற நீர், வட்டித்தல் : பணிமாறல்; வளைத்தல். ஆடியாதி - கண்ணாடி முதலிய சோடசவுபசாரம். புகழ் - ஆகுபெயர்.

(38)

 வாளாங்கு வைகுறினுந் தாமேவந் தருள்புரியும் வாய்மை மைந்தன்
 தாளாண்மைத் தலைநின்ற வழிபாட்டிற் றரிப்பரே தனயன் காண
 வேளாண்மை வித்தகனா ரவணணிந்த வணிமுழுதும் விளங்க விண்ணோர்
 நாளார்ந்த மலர்தூவக் கணநெருங்க நயந்தெதிரே நண்ணி னாரால்.

(இ - ள்.) வாளா தங்கியிருப்பினுந் தாமே வந்தருள்செய்தற் கேதுவாகியிருக்கும் உண்மையை யுடைய குமாரன் முயற்சியினிடத்து முதன்மையாக நின்ற வழிபாட்டினைக் கண்டு தரியாராதலின் புத்திரன் காணும்பொருட்டு (கைம்மாறு கருதாது ஆன்மாக்களுக்குப்) பேருப காரஞ்செய்யும் ஞானசொருபராகிய சிவபெருமான் அவ்விடத்தணிந்த ஆபரணங்கள் முழுதும் விளங்கும்படி தேவர்கள் அன்றலர்ந்த மலர்களைப் பொழியச் சிவகணங்கள் நெருங்க விரும்பி எதிரேவந்து பொருந்தினார்.

(வி - ம்.) வாளாங்கு - வறிதே; பட்டாங் கென்புழிப்போல ஒரு சொல் விழுக்காடு. தாளாண்மை - முயற்சி. தலை - முதன்மை. நாளார்ந்த மலர் - அன்றலர்ந்த மலர்.

(39)

 மறுவலும்வீழ்ந் தெழுந்துநின்ற திருமகனை
           முகநோக்கி வரமே தென்றார்
 முறுவனில வெழக்கனிவாய் முகிழ்விரித்து
           முடித்தலைவிண் ணவர்மே லென்றும்
 கொறுகொறுக்கு மவுணருயிர் குடித்திடுநுஞ்
           ஞானசத்தி கொடுப்ப தென்றான்
 அறுகுமலி சடைமுடியா ரதனொடுபல்
           வரமளித்தவ் விலிங்கத் தானார்.

(இ - ள்.) மறுபடியும் கீழேவிழுந்து வணங்கியெழுந்து நின்ற திருக்குமாரரது முகத்தைப் பார்த்து நீ விரும்பிய வரம் யாதென்றார். பற்களினின்றும் நிலவு வீச கொவ்வைக் கனிபோன்ற வாயாகிய அரும்பை விரியச்செய்து முடியினையணிந்த தேவர்கள்மேல் எப்பொழுதும் கோபிக்கும் அவுணர்களுடைய உயிரையுண்ணுந் தேவரீர் ஞான சத்தியினைக் கொடுத்தலாகு மென்றான். அறுகம்புன் னிறைந்த சடை முடியையுடைய சிவபெருமான் அச்சத்தியை யளித்ததோடு பல வரங்களையுங் கொடுத்து அவ்வருட்குறியின் கண்ணாயினர்.