பக்கம் எண் :

குமரேசப் படலம்273

கண்ணே பொருந்தத் தியானஞ் செய்தோர் அக் கந்தப் பெருமானே யாவர்.

(வி - ம்.) ஏய்க்கும் - உவமவுருபு. குறங்கு - துடை. துங்கம் - உயர்வு. தொடி - வீரவளை.

(45)

 ஐம்பொறியின் வழியொழுகா தவற்றைவியங்
           கொண்டறிவின் மயமே யாக்கிக்
 கொம்பனையா ளிடத்தரனை வழிபாட்டி
           னினிதேத்துங் கொள்கை மிக்கீர்
 பம்புகதிர் மதிமோலிப் பரமர்மகிழ்
           குமாரலிங்கப் பரிசு சொற்றாம்
 வம்பவிழ்பூ வணைக்கிழவன் மாதவஞ்செய்
           தருள்பெற்ற மரபுஞ் சொல்வாம்.

(இ - ள்.) மெய், வாய், கண், மூக்கு, செவியென்னு மைம்பொறிகளின் வழியே செல்லாது அவ்வைம்பொறிகளை ஏவல்கொண்டு அறிவு வடிவமே யாகச்செய்து பூங்கொம்பினையொத்த விடையினையுடைய உமையம்மையா ரிடப்பக்கத்தே யெழுந்தருளியுள்ள சிவபெருமானை வழிபடுதலோடு இனிதாகத் துதிக்குங் குணத்தான் மேம்பட்ட முனிவர்களே! நிறைந்த கிரணங்களோடு கூடிய சந்திரனையுடைய முடியை யுடைய மேலாகிய சிவபெருமான் குமாரலிங்கத்தின் றன்மையைச் சொன்னாம். இனி, வாசனை விரியப்பெற்ற தாமரை யாசனத்தை யுடைய பிரமன் பெரிய தவத்தினைச்செய்து அருளினைப் பெற்ற தன்மையுஞ் சொல்வாம்.

(வி - ம்.) வியங்கொளல் - ஏவல்கொளல். அறிவுமயமே யாக்கி - அறிவு வடிவமாகச் செய்து. பம்பு - நிறைந்த.

(46)

குமாரேசப்படலம் முற்றிற்று.

ஆகத் திருவிருத்தம் 615.