பிரமன் சிருட்டிபெறு படலம் | ஒன்றாகிப் பலவாகி யுருவாகி யருவாகி | | அன்றாகி யாருயிர்கட் காருயிராய் நிறைந்தானும் | | பின்றாழுஞ் சடையானும் பிறங்குநுதல் விழியானும் | | வென்றாலும் விடையானும் விருத்தபுரி வித்தகனே. |
(இ - ள்.) ஒரு பொருளாகியும், பல பொருளாகியும், உருவப் பொருளாகியும், அருவப்பொருளாகியும் (மேற்கூறிய) இவைக ளல்லவாகியும் (வியாபகமாக) நிறைந்த உயிர்களுக்கு (வியாபகமாக) அரிய உயிராய் வியாபித்தவனும், பின்னர்த் தொங்குகின்ற சடையையுடையவனும், நெற்றியில் விளங்குகின்ற விழியையுடையவனும், மேம்பட்டு முழங்கும் ஆனேற்றினையுடையானுமாகிய இவனே விருத்தபுரியென்னும் திருப்பெயரினையுடைய தணிகையின்கண்ணெழுந்தருளி யுள்ள ஞானவடிவினையுடையவன். (வி - ம்.) அன்றாகி - (மேற்கூறிய விவைகள்) அல்லவாகி. நிறைந்தான் - வியாபகமாகவுள்ளான். நுதல்பிறங்கு விழியானென மாற்றுக. ஆலும் - முழங்கும். விருத்தகிரி - மூலாத்திரி. பொருணோக்கி விரித்த கிரி யென்றார். (1) வேறு | முரலுஞ் சிறைவண் டினமொய்த் துளரும் | | அரவிந் தமமர்ந் தவனா றுமுகன் | | விரவுஞ் சிறைவிட் டபின்விண் ணுயர்தன் | | பரவும் பதிசென் றுபதிந் தனனால். |
(இ - ள்.) சிறையினையுடைய வண்டின் கூட்டங்கள் மொய்த்து மூக்காற் கிண்டுதல் செய்து பாட்டினைப் பாடுகின்ற தாமரைமலரின் கண்ணெழுந்தருளிய பிரமன். அறுமுகப்பெருமானாற் பொருந்து சிறையின் கணின்று நீங்கிய பின்னர் விண்ணுலகங்களுள் வைத்துயர்ந்த யாவரும் வணங்கத்தக்க தனது சத்தியலோகத்தின்கட் சென்று தங்கினான். (வி - ம்.) முரலும் - பாடும். அரவிந்த மமர்ந்தவன் - எழுவாய். ஆறுமுகன் - மூன்றாவது. பதிந்தனன் - தங்கினன். (2) | காரா கிருகங் கழிவுற் றபினும் | | ஆரா வமுதா யவருட் பரமன் | | சீரா ரருளாற் செய்சிருட் டிசெய | | வாரா மையினோ கைமனத் திலனே. |
(இ - ள்.) சிறைச்சாலையினின்று நீங்கிய பின்னரும் உண்ணவமையாத தேவாமிர்தம் போன்ற அருளையுடைய சிவபெருமானது |