சிறப்புப்பொருந்திய அருளினாற் செய்கின்ற படைத்தற் றொழிலைச் செய்யவாராமையினானே மனத்தின்கண் உவகையிலனாயினன். (வி - ம்.) காராக்கிரகம் - சிறைச்சாலை. உம்மை - இறந்தது தழீஇயது. ஓகை - களிப்பு. (3) | அந்தோ விதுநாஞ் செயலாம் வழிமற் | | றெந்தோ வெனவெண் ணியசூழ்ச் சியினான் | | முந்தா ரணமுந் தெரியா முதல்வன் | | தந்தா னவனே தரவல் லவனே. |
(இ - ள்.) ஐயோ இப்படைப்புத் தொழிலை (இனி) யாஞ் சுதந்தரமாகச் செய்யும் மார்க்கம் என்னையென்று பலகாலுமெண்ணிய சூழ்ச்சியை யுடையவன், வேதங்களுங் கண்டறியாத முதல்வனாகிய சிவபெருமானே இப்படைப்புத் தொழிலை முன்னர்த் தந்தனன். அவனே இனியுந் தரவல்லவனாவான். (வி - ம்.) அந்தோ - ஐயோ, இரக்கக்குறிப்பு. வழி - மார்க்கம். எந்தோ வென்பது தெலுங்கச்சொல்; அது என்னையென்னும் பொருடந்து நின்றது. "அதெந்துவே யென்றருளாயே" எனத் திருவாசகத்தின் வருதலுங் காண்க. முந்துதந்தானெனக் கூட்டுக. இன்னுமவன் றருவானென்பது குறிப்பெச்சம். (4) | தலைவன் சரணஞ் சரணம் புகினம் | | உலமந் தபவத் துயரோ டுமிவண் | | அலமந் தவருந் துயருந் தவிர | | நிலவுந் தொழிலென் றுநினைந் தனனே. |
(இ - ள்.) (செத்துப் பிறக்கின்ற வென்போன்ற தேவர்கட்கெல்லாந்) தலைவனாகிய சிவபெருமான் றிருவடிகளைப் பற்றுக்கோடாகப் புகின் நமது வருத்துகின்ற பிறவித்துன்பத்தோடும் இப்படைப்புத் தொழிலின்கட் சுழலுகின்ற அரியதுன்பமும் நீங்க இப்படைப்புத் தொழிலும் நிலைபெறுமென்று நினைந்தனன். (வி - ம்.) சரண் - பாதம், பற்றுக்கோடு. உலமந்த - வருத்துகின்ற. அலமந்த - சுழல்கின்ற. நிலவும் - நிலைபெறும். (5) | உத்தா லகவா ரணியப் பெயருற் | | றித்தா ரணிபோற் றவிருந் தபதி | | வித்தா ணவமாய்க் கும்விழுத் தவரோ | | டத்தா னமகன் றடைவுற் றனனே. |
(இ - ள்.) உத்தாலக வனமென்னும் பெயரினைப்பெற்று, இவ்வுலகின் கணுள்ளவர்களெல்லாந் துதிக்கவிருந்த திருக்குற்றாலமென்னுந் திருப்பதியை ஆணவமாகிய விதையைக் கெடுக்குஞ் சிறந்த தவத்தையுடைய முனிவர்களுடன் அச் சத்தியலோகத்தைவிட்டு நீங்கி அடைந்தனன். |