பக்கம் எண் :

பிரமன் சிருட்டி பெறு படலம்277

பறழ் - குட்டி, பார்ப்பும். இரும் - சுவையின் மிகுந்த. இஃது உவமையணி.

(9)

 அருவி தொட்டவ றைக்குழி மாத்தன
 கருவி முந்திரி கைப்பழ மீந்தின
 வுருவ வின்மது வோடுகக் கேடின்றிப்
 பருவ மன்றிப்ப யப்பவொர் பாலெலாம்.

(இ - ள்.) அருவியாற் றோண்டப்பட்ட பாறையின்கண்ணுள்ள குழிகளில் மாமரங்களி னுள்ளனவாகிய பழங்களும், தொகுதியாகிய முந்திரிகைப் பழங்களும், ஈச்சமரங்களின்கண்ணுள்ளனவாகிய பழங்களும் நிறத்தோடுகூடிய இனிய தேனோடு வீழ்தலால் (அக்குழிகள் அழுகல் முதலிய) கேடின்றி (அவைகள் பலன் கொடுக்கவேண்டும்) காலங்களினல்லாமல் எக்காலத்தும் பழங்களைத் தரும் ஒருபகுதியிடங் களினெல்லாம்.

(வி - ம்.) அறை - பாறை. தொட்ட - தோண்டின. மாத்தன - மாவின்கண் ணுள்ளனவாகிய பழங்கள். "கழனிமாத்து விளைந்துகு தீம் பழம் - பழனவாளை கதூஉமூரன்" என்னுங் குறுந்தொகைச் (8) செய்யுளா னறிக. கருவி - தொகுதி, இதனைக் "கருவிதொகுதி" யென்னுந் தொல்காப்பியச் சூத்திரத்தா னறிக. அறைக்குழிகள் பயப்பனவென வினைமுடிவு செய்க. முப்பழங்களுந் தேனோடு அக்குழியில் வீழ்ந்து கெடுதலின்றிக் கிடத்தலால் "பருவமன்றிப் பயப்பவோர்பா லெலாம்"
என்றார்.

(10)

 கால மன்றியுங் குற்றுக் கடவுளர்
 பால ளிப்பப் படர்தவத் தாலளி
 மேல டாதன போல்விரைச் சண்பகச்
 சோலை விண்ணந்து ழாவுமொர் பாலெலாம்.

(இ - ள்.) காலமல்லாத காலத்திலும் பறித்துக் கடவுளர்மாட் டுய்ப்பச் செய்கின்ற தவத்தினாலே வண்டுகள் மேலே பொருந்தாதன போல வாசனையுடைய சண்பகச் சோலைகள் ஒருபாலெல்லாம் ஆகாயத்தை யளாவும்.

(வி - ம்.) காலையரும்பிப் பகலிற்போதாகி மாலையின் மலர்தலால் இரவின் வண்டுகள் மொய்க்கா. வைகறையின் அதனைக் குற்றுக் கடவுளர்பாற் சேர்த்தல் வழக்காகும். சண்பகமலர்களின் வண்டு மொய்க்காதாதலின் எக்காலத்தும் பரிசுத்தமாக இருக்குமென்பது தோன்ற "கால மன்றியுங் குற்றுக் கடவுளர் - பால ளிப்பப் படர்தவத் தாலளி - மேல டாதன போல்" என்றார். குற்று - பறித்து. இதனை "பற்றின் மிக்கதோர் பாவை யிவ்வரை, சுற்றி வந்துநீ சூடுங் கோடல்கள், குற்று வந்துநின் குழற்குநல்குவன், நிற்றி யீண்டென நிறுவிப் போயினாள்" என்னுங் கந்தபுராணம் (வள்ளி. 141) செய்யுளா னறிக. குற்றாலத்திற் செண்பகாடவி யென்னுமோ ரிடமுள்ளது; இதனை "செண்பகாடவியின் பண்பு சொல்லக்கேளாய்" என்னுங் குறவஞ்சி யடிகளா னுணர்க. இது தற்குறிப்பேற்றம்.

(11)