| சுனைம லர்க்கணந் துற்றுவ வென்றுதேன் | | இனைய வாளையி டித்திறை கொள்வபோற் | | றுனைய வும்பர்த்தொ டுத்தவி றால்கிழீஇ | | நனையு குக்குந லத்ததொர் பாலெலாம். |
(இ - ள்.) வாளைமீன்கள், தாங்கள் வாழும் சுனையின்கண் (சோலை யின்கண்ணுள்ள) வண்டுகள் மலர்க்கூட்டங்களை நிறைப்பனவென்று (அவ்வண்டுகள்) வருந்தும்படி வருத்தி (எளியவர் பொருளை வலியவன் வௌவித் துன்பஞ்செய்யின்) அரையன் (தண்டித்துக்) கொள்ளுமாறு போல ஆகாயத்தில் விரைவாகத் தாவி (அச்சோலைகளின்) கிளைகளிற் றொடுத்துள்ள தேன்கூட்டைக் கிழித்துத் தேனைச் சிந்தும்படியான நன்மையை யுடையது ஒருபகுதியினிட மெங்கணும். (வி - ம்.) கணம் - கூட்டம். தேன் - வண்டு. இனைய - வருந்த. இறை - அரையன். துனைய - விரைய. கிழீஇ - கிழித்து. நனை - தேன். (12) | வண்டு போய்மலர்க் காந்தளின் மூசுதல் | | கண்ட ழற்குட்க விழ்ந்தன வென்றுநீர் | | நொண்டு நுண்டுளி தூஉய்ப்பெயர்த் தோகையுட் | | கொண்டு மந்திகு னிக்குமொர் பாலெலாம். |
(இ - ள்.) ஒருபா லெல்லாங் குரங்கினங்கள், வண்டுகளானவை காந்தண் மலர்களில் மொய்த்தலைப் பார்த்து இவ்வண்டுகள் தீயின்கண் மூழ்கினவென்று நினைத்துக் கையால் நீரை முகந்துகொண்டு நுண்ணிய துளிகளைத் தூவி அவைகளை நீக்குதலான் (அவைகள் பிழைத்தன வென்று கருதி) மகிழ்ச்சியை யகத்திற்கொண்டு குதிக்கும். (வி - ம்.) "குழலிசைய வண்டினங்கள் கோளிலைய செங்காந்தட் குலைமேற்பாய, அழலெரியின் மூழ்கினவா லந்தோ வளியவென் றயல் வாழ்மந்தி, கலுழ்வன போனெஞ்சயர்ந்து கல்லருவி தூஉம் நிழல் வரை நன்னாட னீப்பனோ வல்லன்" என்னும் செய்யுளின் கருத்தமைந் திருத்தல் காண்க. மூசுதல் - மொய்த்தல். "மூசன் மொய்த் திடல்சா வென்ப" என்னும் நிகண்டானறிக. நீர் நொண்டு - நீர் முகந்து. இதனை "நோக்கினா ணெடுங்க ணென்னுங் குடங்கையா னொண்டு கொண்டு, வாக்கமை யுருவின் மிக்கான் வனப்பினைப் பருக" என்னும் சிந்தாமணி (பதுமை 93) செய்யுளானு முரையானு முணர்க. குனிக்கும் - குதிக்கும். இது மயக்கவணி. (13) | இனிய செய்கையர் யாங்குள ரோவெனத் | | துனியில் கேள்வியர் சூழ்ந்தனர் நேடல்போற் | | புனித மென்கிழங் காதி புரைகிளைஇத் | | தனிவில் வேடர்ச ரிப்பதொர் பாலெலாம். |
|