பக்கம் எண் :

பிரமன் சிருட்டி பெறு படலம்285

யணிந்து (அணிந்தார்க்கு) செல்வம் மிகும்வண்ணம் அருளும்படியான உருத்திராக்கமணியினைத் தலை முதலிய உறுப்புக்களின் அணிந்து.

(வி - ம்.) வைகல் - நாள். வாவும்மான் : விகாரம். அமரன் - தேவன். தணவுறினும் - நீங்கினும். ஒழியாவென்னும் பெயரெச்சம் அருவியென்னும் பெயர்கொண்டு முடிந்தது.

(31)

 குழகன்றிரு வுருவாங்குறும் பலவுங்குழ கன்மெய்
 நிழல்செய்தமர் குற்றாலமு நிமலந்தரு மிறைவன்
 அழகொன்றிய சபையுந்தொழு தன்பாலருச் சனையும்
 தழையச்சிவ லிங்கத்தினி யற்றித்தவ முறுநாள்.

(இ - ள்.) இறைவன் திருவுருவடிவமாகிய குறும்பலாவினையும், அவ்விறைவனது திருமேனிக்கு நிழலைச்செய்து தங்குகின்ற குறுகிய ஆலமரத்தினையும். (ஆன்மாக்களுக்கு) மலநீக்கத்தினைச் செய்கின்ற சிவபெருமானது அழகுபொருந்திய சித்திரசபையினையும் வணங்கி அன்பினாலே சிவலிங்கத்தினிடத்து உயிர்களெல்லாம் செழிப்புற அருச்சனையுஞ்செய்து தவத்தைச் செய்கின்ற காலத்து.

(வி - ம்.) குறும்பலா - குறுகிய பலாமரம். குற்றாலம் - குறுகிய ஆலமரம். சபை - சித்திரசபை. சிவலிங்கத்தினிடத்து அருச்சனையு மியற்றி
யென்க.

(32)

 வட்டச்சடை யத்தாணியின் மலர்மெல்லணை மேலால்
 அட்டுத்தழ லரவங்குடை யாகக்குளிர் மதியம்
 விட்டுக்கதிர் விரியப்பயில் வீறுய்த்தருள் விமலன்
 மொட்டுக்குவி முலைமாதுடன் முன்னேயெதிர் நின்றான்.

(இ - ள்.) வட்டவடிவமாகக் கூட்டிக் கட்டிய சடையாகிய அரசிருப்பு மண்டபத்தின்கண்ணுள்ள கொன்றைப் பூக்களாலாகிய பஞ்சணையின்மீது விடமாகிய அக்கினியைக் கக்குகின்ற பாம்பானது குடையாகக் குளிர்ந்த சந்திரன் ஒளியை வெளியிட்டு வீசும்வண்ணந் தங்கும் படி பெருமையைத் தந்த மலமற்றவனாகிய சிவபெருமான் பூவரும்பைப் போலக் குவிந்த தனங்களையுடைய உமாதேவியாருடன் முன்னர்த் தோன்றி நின்றனன்.

(வி - ம்.) உருவகவணி. தழல்அட்டு அரவம் எனக் கூட்டுக. அட்டல் - ஈண்டுகக்கல். அத்தாணி - அரசிருப்பு மண்டபம். கதிர்விட்டு விரிய வெனக் கூட்டுக. பயில் - தங்கிய. வீறு - பெருமை. மொட்டு - பூவரும்பு.

(33)

 கண்டானுடல் கவலைக்கட றாழக்கடி தெழுந்தான்
 தண்டாமரை நுண்டாதுத யங்குந்தட மார்பம்
 மண்டான்படி யத்தண்டென மலர்மெல்லடி வீழ்ந்தான்
 கொண்டான்வல மெதிர்நின்றுகை குவியத்துதி புகல்வான்.