பக்கம் எண் :

திருநாட்டுப் படலம்29

தம்மை வழிபடுகின்ற அரியஉயிர்களாகிய குகைகள்தோறும் (எள்ளிலெண்ணெயைப்போற் கலந்து நீக்கமின்றி நிற்றலான்) குகனென்று சொல்லப்படும் காரணப் பெயர்க்குப் பொருந்துமாறிருப்பது போலாம்.

(வி - ம்.) கலத்தல் - சேர்ந்திருத்தல். உயிர்க்குகை-பண்புத்தொகை; வணங்குமா ருயிர்க்குகை தொறும் - தம்மை வழிபடுமரிய உயிர்களின் இதயக் குகைதோறும் என்றலுமொன்று; "தகரமாங் குகையுட்டியானஞ்செய் திடுமுறை" என்பதும் நோக்குக.

(33)

 நொடித்த றீதென நுனித்தறிந் திருந்தினை விளைப்பார்
 துடித்த லைப்படர் சந்தனக் குங்குமத் தொகுதி
 வடித்த நவ்வியா லெறிந்தெரி மடுக்குமொண் புகையுந்
 தடித்து மேகமுந் தவழ்வன வேற்றுமை காட்டா.

(இ - ள்.) பெரிய தினையை விளைவிப்பவராகிய குறிஞ்சிநிலமாக்கள் (ஓரறிவுமுதலாறறிவீறாயுள்ள உயிர்களை) அழித்தல் தீதென்று கூர்த்துச் சென்றறிந்து வைத்தும் அசைதலைத் தன்னிடத்துப் பொருந்திய சந்தனமுங் குங்குமமுமாகிய மரத்தின் கூட்டங்களைக் கூர்மைசெய்த கோடரியால் வெட்டி எரியிலிடுதற்கணுளவாகிய புகையும் மின்னலையுடைய மேகங்களும் வேற்றுமை காட்டாதெனவாய்ச் செல்வனவாம்.

(வி - ம்.) நொடித்தல் - அழித்தல்; இதனை 'நொடித்தான் மலையுத்தமனே' என்னுந் தேவாரத் திருவாக்கானறிக. அறிந்து மென்னுமும்மை விகாரத்தாற்றொக்கது. அறிந்தும் விளைப்பார் எறிந்து மடுக்கும் புகையெனக் கூட்டுக. வடித்தல் - கூராக்கல்; துடித்தல் - அசைதல்; இனி துடிதக்கோல மரமெனவும் தலைப்படர் சந்தனமென்பதற்கு அவ்விடத்துப் படர்கின்ற சந்தனமெனப் பொருள் கூறுவாருமுளர்.

(34)

 சுள்ளி வேலிய குறிச்சியர் சுரைபடு மிரும்பின்
 வள்ளி கெண்டிய குழிகளின் மாலைவெள் ளருவி
 யள்ளி யுய்த்தவெள் வயிரமு மாரமு நிதியின்
 பள்ளி போன்மெனப் பசும்பொனோ டிமைப்பன பலவும்.

(இ - ள்.) மராமரமாகிய வேலியையுடைய குறிச்சியின்கண்ணுள்ள இறவுளர்கள் துவாரம் பொருந்திய இரும்பாலாகிய கருவியான் வள்ளிக்கிழங்கை யெடுக்கத் தோண்டிய பள்ளங்களின்மாட்டு (அக்குறிச்சிக்கணின்று) மாலையைப்போல வொழுகுகின்ற வெள்ளிய அருவி நீரானது அள்ளிவீசிய வச்சிரங்களும் முத்தங்களும் பலவாகியமற்றை இரத்தின வருக்கங்களும் பசிய பொற்கட்டிகளோடு பொருட்குவியலைச் சேமித்து வைத்திருக்குமிடமென்று சொல்லும் வண்ணம் ஒளி வீசின.

(வி - ம்.) சுள்ளி-மராமரம்; இனிச் சிறுகொம்பென்பாரு முளர்; சுரை - துவாரம்; இரும்பு: ஆகுபெயர்; கெண்டிய - தோண்டிய; "செக்கர் ஞெண்டின் குண்டளை கெண்டி" என்பதனாலறிக. வள்ளி: ஆகுபெயர். போன்ம்: மகரக்குறுக்கம்; பள்ளி - இடம். ஆரமும் வயிரமும் ஏனைய பலவும் பொன்னொடு இமைப்பனவெனக் கூட்டுக.