பக்கம் எண் :

296தணிகைப் புராணம்

 பெற்று வெற்பிவர் பெற்றிமை
 உற்ற னன்னுயர் மால்வரை.

(இ - ள்.) நல்ல பெரிய தவத்தினைப் பாதுகாத்து ஓராண்டு ஆண்டுக் கழியத் தணிகைமலையின் கண்ணேறுந் தன்மையினைப் பெற்று அம் மேகங்கள் தங்குகின்ற உயர்ந்த மலையினையடைந்தான்.

(வி - ம்.) பொற்ற - நல்ல இதனை "மற்றிம் மாநகர் மாந்தர்களி யாவரும், முற்று நாறியுங் கண்டு முணர்ந்திவை, பொற்ற சுண்ணமெனப்புகழ்ந் தார்நம்பி, கற்ற தும்மவர் தங்களொ டேகொலோ" என்னும் சிந்தாமணி (குணமாலை - 35) செய்யுளானு முரையானு முணர்க. மால் - மேகம், இதனை "மாலமர் பெருஞ்சினை வாகை மன்றமும்" என்னு மணிமேகலை யடியானுணர்க.

(60)

வேறு

 நைகரமி லன்போடு நண்ணும் வேதன்
 செய்கழற்காற் குமரனழைத் திருவுந் தீர்த்தம்
 பொய்கடியும் விதியாற்றிற் புகுந்து தோய்ந்து
 மெய்கதுவும் வினைமுழுதும் விழைந்து செய்தான்.

(இ - ள்.) வருத்தமில்லாத அன்பினோடு (ஆண்டுப்) பொருந்துகின்ற பிரமன் வேலைப்பாடு செய்யப்பெற்ற வீரக்கழலினை யணிந்த குமரக்கடவுள் அழைத்துத் தங்கச்செய்த தீர்த்தத்தின்கண் பொய்யை நீக்குகின்ற விதிப்படியே சென்று மூழ்கி உண்மைத் தன்மையைப் பொருந்துகின்ற எல்லா வினைகளையும் விரும்பிச் செய்தான்.

(வி - ம்.) நைகரம் - துன்பம். செய் - வினைத்தொகை. கடியும் -
நீக்கும்.

(61)

 மட்டுவிரி பொழிற்குன்றம் வலம்வந் தேறிச்
 சட்டவிடர் தபுமாவச் சகாயற் போற்றி
 எட்டுருவாங் குமாரலிங்கத் திறைவன் பாதம்
 அட்டுமது மலர்தூவி யஞ்சித் தானால்.

(இ - ள்.) தேன் விரியப்பெற்ற சோலை சூழப்பெற்ற மலையை வலமாக வந்து ஏறுதலைச் செய்து விரைவாகத் துன்பம் நீங்கப்பெற்ற ஆவச்சகாயனைத் துதித்து அட்டமூர்த்த வடிவமாகிய குமாரலிங்க வடிவமாகிய சிவபெருமான் பாதத்தில் நிறைந்த தேனோடு கூடிய பூக்களைத் தூவி யருச்சித்தான்.

(வி - ம்.) மட்டு - தேன். சட்ட - விரைய. இதனைச் "சட்டவிக் கதவந் திறப்பிம்மினே" என்னுந் தேவாரத்தானறிக. எட்டுரு - முன்னர்க் கூறினாம். அட்டு - நிறைந்த. அஞ்சித்தல் - வணங்கல். இதனை அஞ்சலி வணங்கல் வாவற்பறவையு மாகுமென்ப" என்னும் நிகண்டா னறிக.

(62)