பக்கம் எண் :

298தணிகைப் புராணம்

 தன்னருளைப் பிழைப்பதே தண்டாச் செல்லல்
 என்னுமது முன்றெரித்த விறைவன் மீட்டும்
 தன்னருளைப் பெறுவதே தக்க வின்பம்
 என்னுமது தெரிப்பவாங் கெதிரே தோன்றும்.

(இ - ள்.) தன்னுடைய அருளைப் பிழைத்தொழுகுதலே நீங்குதலில்லாத இன்னலாகு மென்னுமதனை முன்னர்த் தெரிவித்த தலைவனாகிய முருகன் மீளவுந் தனது திருவருளைப் பெறுவதே ஆன்மாக்களுக்குத் தகுதியையுடைய இன்பமாகுமென்னு மதனைத் தெரிவிக்க அவ்விடத்துப் (பிரமனுக்கு) எதிரே தோன்றாநிற்கும்.

(வி - ம்.) செல்லல் - துன்பம், இதனை "செல்லலின்ன லின்னாமையே" என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்தானறிக. தெரித்த - விவ் விகுதி தொக்குநின்றது.

(66)

வேறு

 நலம்புரிந் தண்மி னோர்க ணண்ணிய வெம்மைப் போலக்
 குலம்புரி தேவ தேவர் குருமணி முடிக டாழ
 வலம்புரி முத்தம் போல வயங்குவ ரென்னு மாபோற்
 சிலம்புகிண் கிணிகண் மற்றுஞ் சேவடித் துணையி னார்ப்ப.

(இ - ள்.) நன்மையைச் செய்து அணுகினவர்களுடைய பிறவித் துன்பத்தின் கொடுமை தாழ்வடைதல்போல மேன்மையைச் செய்கின்ற தேவர்களுக்குத் தலைவராகியோர் தலைவர் வணங்கலால் (அத்தேவர்கள்) வலம்புரிச்சங்கினுண்டாகிய முத்தினைப்போல (யாவரினும் மேம்பட்டு) விளங்குவார்களென்று கூறுதல்போலச் சிலம்பென்னும் அணியும், கிண்கிணியென்னும் காலணியும் பிறவும் இரண்டு சேவடிகளினிடத்து மொலிப்ப.

(வி - ம்.) இனிச் சிலம்பென்பதனை வினைத்தொகையாக்கி ஒலிக்கின்ற கிண்கிணி யெனினுமாம்.

(67)

 வலத்தினர் கொள்ப வென்னு மரபினைத் தெரித்திட் டாங்கு
 வலத்தனித் தாள்சேர்ந் தாண்மை மாற்றலர் கழலு மாற்றால்
 நலத்தகு கழலென் றோது நகைமணிக் கழல்கண் டோரைக்
 கலத்தலென் றுணர்த்து மாபோற் கலகல கலவென் றார்ப்ப.

(இ - ள்.) வல்லமையுள்ளோரே கொள்வார்களென்னு முறையினைத் தெரித்தாற்போல ஒப்பற்றவல்லமையுள்ள வலப்பக்கத்துத் தாளிற்பொருந்திப் பகைவரது ஆண்டன்மை கழலுதற் கேதுவாகிய தன்மையினால் நன்மை பொருந்திய கழலென்னுங் காரணப் பெயராற் சொல்லப்பெறும் ஒளியோடு கூடிய மணிகள் பதித்த காலிலணியும் மணிவடம் தரிசித்தோரைத் (திருவடியிற்) கலக்கவென்றுணர்த்துதல் போலக் கலகலகலவென் றொலித்தலைச் செய்ய.