பக்கம் எண் :

பிரமன் சிருட்டி பெறு படலம்299

(வி - ம்.) வலத்தினர் - வல்லமையுள்ளோர். மரபு - முறை. வலத் தனித்தாள் - வல்லமையுள்ள ஒப்பற்ற திருவடி எனினும் ஆம் ஆண்மை - வல்லமை, ஆண்டன்மை கழலுந்தன்மையாலிப் பெயர் பெற்ற கழலென்க. கலத்தல் - கலக்குக, தல் : வியங்கோள் விகுதி. மாறு போல : விகாரம். கலகல : ஒலிக்
குறிப்பு.

(68)

 வெங்கதிர் மணிகால் யாத்த மேகலை மூன்று தாங்கும்
 அங்கியு மிவனே யென்ன வறிவுறுப் பனபோ னின்ற
 செங்கதிர்ப் பட்டுஞ் சேர்த்த திருவரை நாணு மும்பர்ப்
 பொங்கொளிப் பட்டின் சுற்றும் புகர்மல மூன்றுஞ் சீப்ப.

(இ - ள்.) வெவ்விய கிரணங்களோடு கூடிய அரதனங்களைப் பதித்த சுற்றுச்சுவர்கள் மூன்றினையுந் தாங்குகின்ற அங்கியங் கடவுளு மிம்முருகனே யாவானென்று அறிவுறுப்பனபோல, நிலைபெற்றன வாகிய சிவந்த ஒளியுடைய பட்டுடையும், திருவரையிற் பொருந்திய அரைஞாணும் அதன்மேலே மிகுந்த வொளியையுடைய பட்டின் சுற்றுமாகிய மூன்றும் குற்றம் பொருந்திய மும்முலங்களையும் நீக்க.

(வி - ம்.) மேகலை - யாககுண்டத்தின் சுற்றுச்சுவர், அவை மூன்றாவன :- காருகபத்தியம், ஆகவனீயம், தென்றிசை யங்கியாகிய மூன்றாம். இவை முறையே சதுரமாகவும், வட்டமாகவும், முக்கோணமாகவும் யாககுண்டங்களிற் செய்யப்படுவனவாம். கால்யாத்தல் - ஈண்டுப் பதித்தல்.

(69)

 மூவரு மங்கத் தோர்பான் முகிழ்க்குமா செய்யு மாண்மை
 மூவரை காட்டு மார்ப மொய்வரை யருவி யன்ன
 மாவிரை பொங்கும் பூந்தார் மணிவடம் பொற்றா ரெல்லாம்
 நாவலர்க் கடங்காப் பொற்பி னகுகதிர் பிணைந்து துள்ள.

(இ - ள்.) அயனரியரனென்னு மூவரையும் திருவுருவினொரு பகுதி யிற்றோன்றச் செய்யும் ஆண்மை மூன்றுத்தமவரைகள் காட்டா நிற்குந் திருமார்பின்கண் மூங்கில்கள் நெருங்கப்பெற்ற மலையினின்றிழியும் அருவியையொத்த வண்டுகளோடு வாசனையு மிகப்பெற்ற. பூக்களாலாகிய மாலையும், அரதனமாலையும், பொன்னரி மாலையுமாகிய இவையெல்லாம் நாவலர்களுக்கும் சொல்லுதற்கடங்காத அழகினோடு ஒளிர்கின்ற கதிர்கள் ஒன்றினோடொன்று பிணங்கித் துள்ள.

(வி - ம்.) முகிழ்க்குமாறு : விகாரம். ஆண்மை மூன்றுவரை காட்டுமார்பமென்க. மூவரை - மூன்றுவரி; ஆடவர்க்குரிய வுத்தம விலக்கணங்களிலொன்று; இதனை, "வரையகன் மார்பிடை வரியு மூன்றுள, புரைதபு பொன்புரை நாவு முள்ளுடைத், தருவரைத் தோள்களு மமரர் கோன்களிற், றுருவுகொ டடக்கையி னுருவு கொண்டவே" என்னுஞ் சிந்தாமணி (கேமசரி - 51) செய்யுளானும் "ஆரந்தாழ்ந்த அம்பகட்டு மார்பிற், செம்பொறி வாங்கிய" என்னுந் திருமுருகாற்றுப் படையடியானுமுணர்க. மா - வண்டு. நாவலர்க்கும் உம்மை தொக்கது. வரை : ஆகுபெயர்.

(70)