பக்கம் எண் :

304தணிகைப் புராணம்

மரச்சுற்று ; இதனை "கிடுகுதேர் மரச்சுற்றாகும்" என்னும் நிகண்டா னறிக. மோலி - கிரீடம். கூம்பு - தேர்மொட்டு.

(79)

 அணிபரித் தொழுகி வார்ந்த வவிர்மணிச் செவிகள் சுற்றில்
 பிணிமணி வடங்க டூக்கிப் பிறக்கிய தெனக்க வித்த
 மணிமுடித் தேர்மேற் போக்கின் வார்கொடிக் குழாங்க ளாங்குத்
 தணிவற வெழுந்து துள்ளுந் தண்கதிர்க் கொழுந்து காட்ட.

(இ - ள்.) விளங்குகின்ற செவிகள் ஆபரணங்களைத் தாங்கிமிகத் தொங்குவன. தேரின் சுற்றுப் பக்கங்களிற் பிணிக்கப்பெற்ற அழகிய கயிறுகளைக் கட்டி விளக்கியதென்று சொல்லச், சூட்டப்பெற்ற அரதனங்கள் பதித்த முடியாகிய தேரின் மேற்பாகத்துள்ள நீண்ட கொடிக் கூட்டங்களை அம்மேலிடத்தே ஒழிவில்லாமல் எழுந்து துள்ளுகின்ற குளிர்ச்சிபொருந்திய கிரணங்களினெழுச்சி காட்டாநிற்க.

(வி - ம்.) செவிகள் அணியைத் தாங்கிவார்ந்தனவென முடிக்க. சுற்றின் - தேரின் சுற்றுப்பக்கத்தில். குழாங்களைக் கதிர்காட்ட வென்க. அம்முடியிற் பரித்துள்ள மணியின் கிரணக் கூட்டமென்க. பரித்து - தாங்கி. ஒழுகிவார்தல் - மிகுதியும் நீடல்; இதனை "வார்தல் போக லொழுகன் மூன்றும்-நேர்தலும் நெடுமையுஞ் செய்யும் பொருள" என்னும் தொல்காப்பியச் (சொல் உரி) சூத்திரத்தானறிக. தூக்கி - கட்டி. கவித்த - சூடிய.

(80)

 கருங்கடல் வரைப்பிற் செய்ய கதிரவ னெழுந்த தென்ன
 ஒருங்கரத் தொகைக ணூறு மொண்சிறைக் கலாவ மஞ்ஞை
 நெருங்குபல் வன்னப் புள்ளி நிகழ்வெரிந் தலையிற் றோற்றி
 மருங்குபல் கணமுஞ் சூழ மலரவ னெதிரே சென்றான்.

(இ - ள்.) கரிய கடலினிடத்துச் செம்மைநிறம் பொருந்திய சூரியன் றோன்றினாற்போல, ஒருசேரப் பாம்பின் கூட்டங்களைக் கொல்லும் ஒள்ளிய சிறையினையும், தோகையினையுமுடைய மயிலினது ஒன்றினோடொன்று நெருங்குகின்ற பல நிறங்களோடுகூடிய புள்ளிகள் நிகழாநின்ற முதுகினிடத்துத் தோன்றிப் பலகணங்களும் பக்கத்தே சூழப் பிரமாவி னெதிரிற் சென்றான்.

(வி - ம்.) கடல் மயிலுக்கும், இரவி முருகனுக்கும் பண்புந் தொழிலும்பற்றிய உவமம். இதனை "உலக முவப்ப வலனேர்பு திரிதரு - பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாங்கு" என்னுந் திருமுருகாற்றுப் படை யடியானு முரையானும், "நீல நெடுங்கொண்மூ நெற்றி நிழனாறிக், காலை யிருள்சீக்கும் காய்கதிர்போற், கோல, மணித்தோகை மேற்றோன்றி மாக்கடற்சூர் வென்றோன் - அணிச் சேவடியெம் மரண்" எனும் இரும்பல்காஞ்சிச் செய்யுளானு மறிக. அராத்தொகை : விகாரம். நூறும் - கொல்லும். வெரிந் - முதுகு.

(81)

 விண்ணவர் சொரிபூ மாரி மெய்யெலா மினிமை யாக்கத்
 தண்ணுமை பதலை தக்கை தகணிச்சங் குடமு ழாக்கள்