பக்கம் எண் :

பிரமன் சிருட்டி பெறு படலம்307

(இ - ள்.) கலைகளைக் கற்காத நிலைமையையுடைய இளமைப் பருவத்தின்கண்ணே நிற்கின்றாய். நூல்கண் முற்றிலும் செவியறிவுறுத்தும் முதுமைப் பருவத்தின் கண்ணும் நிற்கின்றாய். உலகத்தில் இயங்கா நின்ற வேதாங்கங்களும் முதலாக மிக்க நூல்கள் மலைவில்லாமலுணர்த்தும் பொருளெல்லாமாகின்றாய். இவைகளொன்றுமில்லாமல் வளர்கின்ற சத்துப்பொருளாகி நிற்கின்றாய். நின்னை நின்மல துரியாதீதத்தின் கண் ஏகனாகி நின்ற சீவன் முத்தரையன்றி வேறியாவ ரறியவல்லுநர்.

(வி - ம்.) மெய் - சத்து. இளமைப்பருவமும் முதுமைப் பருவமு முடையவனாகவு மிருக்கின்றாயென்பார் "இளமைக்கணிற்றி, முதியநிலை மைக்கணிற்றி" என்றார்.

(86)

 இழிவுற்ற டுத்த மலகேவ லத்தி னிணர்வாய்ந்த லர்ந்த தருவின்
 அழலொத்தி யாவி யுருவாதி யோடு மணைவுற்ற போது சிலையின்
 நிழலக்க திர்க்கு மனலொத்தி யன்ன நிகழாத வீட்டி னயமார்
 தழலொத்தி நின்னை யருளாகி நின்ற தவரன்றி யாவ ரறிவார்.

(இ - ள்.) கீழாந்தன்மை யடைந்து பொருந்திய (உயிரானது உடலோடு கூடாமலிருக்கின்ற) நித்திய கேவலாவத்தையின்கண் பூங் கொத்துக்கள் பொருந்தப்பெற்று மலர்தலைச் செய்த மரத்தின் கண்ணுள்ள தீயினை யொத்திருக்கின்றாய். உயிர், தனு, கரணங்களோடு பொருந்திய சகலாவத்தையின்கண் கல்லின் ஒளியையுடையனவாகத் தோன்று தீயினையொத்திருக்கின்றாய். இக்கேவலமும் சகலமும் நிகழாத தன்னியல்பி னிற்றலாகிய வீட்டின்கண். இரும்பினிடத்துப் பொருந்திய தீயினையொத்திருக்கின்றாய். நின்னை நின்மல துரியாதீதத்தின்கண் ஏக னாகிநின்ற சீவன் முத்தரையன்றி வேறியாவரறிய வல்லுநர்.

(வி - ம்.) "விறகிற் றீயினன் பாலிற்படு நெய்போல், மறையநின் றுளன் மாமணிச் சோதியான், உறவு கோனட் டுணர்வு கயிற்றினால் முறுக வாங்கிக் கடையமுன் னிற்குமே" என்னும் அப்பர் திருவாக்கீண் டுணரத்தக்கது. கேவலாவத்தையிற் றனுகரணங்களின்மையி னறிவிச்சை செயனிகழாமை நோக்கி இறைவன் கலப்புற்றிருந்தும் வெளிப்படாமை கருதி "தருவினழலொத்தி" எனவும், சகலாவத்தையில் அறிவிச்சை செயல்கள் நிகழ்தலின் இறைவன் விளக்கம் ஏகதேசமாகத் தோன்றலின் "சிலையினிழலக்கதிர்க்கு மழலொத்தி" எனவும், முத்தியின் கண்ணே பசுகரணங்களெல்லாம் பதிகரணங்களாக ஏகனாகி நிற்றலின் "அயமார்தழ லொத்தி" எனவும் கூறினார். மலகேவலம் - நித்தியகேவலம். ஆவி - ஆன்மா. உருவாதி - தனுகரணங்கள். சிலை - கல். நிழல் - ஒளி. அன்ன - கேவல சகலாவத்தைகள். அயம் - இரும்பு.

(87)

 இருளத்து லப்பி லுயிர்மூழ்கி நிற்ப வியல்விச்ச தேது மிலதாக்
 கருணைத்தி றத்தி னலகற்ற வாவி கருவிப்ப டுத்தி கருவி
 மருவுற்ற வற்று ளுயிர்சில்ல வாங்கி மயரற்ற சுத்த நிலையில்
 தருகிற்றி நின்னை யருளாகி நின்ற தவரன்றி யாவ ரறிவார்.

(இ - ள்.) அநாதி கேவலத்தின்கண் கெடுதலில்லாத வுயிர்கள் தனுகரணங்களோடு கூடாது, மூழ்கி அறி வோர்சிறிது மிலவா