பக்கம் எண் :

பிரமன் சிருட்டி பெறு படலம்309

(அங்ஙன முடித்தும் அத்தொழிலைச் செய்தவன் இறைவனேயென அவ்வான்மாக்கள்) அறியும்படி யதனைத் தெரிவிக்கின்றாய். (அத்தொழிலின் பயனை யவ்வான்மாக்கள் நுகருமாறு செய்து வருந்தும்படி தண்டிக்கின்றாய். அவ்வினைப்பயன் மிகாவண்ணம் அவ்வான்மாக்களை (நீ திருவாய்மலர்ந்தருளிய வுண்மை நூலின்) வழியிற் செலுத்துகின்றாய். அங்ஙனம் நூன்மார்க்கத்தின்கட் செல்லாத வான்மாக்களை (வினைக்குத்தக) நரகத்தினிடத்தும் வருத்துகின்றாய். (இவ்வாறுடனாய் நின்று யாவையும் செய்தும்) சகுடபத்திர வுதகம்போல அவையொன்றும் நின்னைச் சிறிதும் தாக்காதவண்ணம் விளங்குகின்றாய். நின்னை நின்மல துரியாதீதத்தின்கண் ஏக னாகி யிறைபணி நின்ற சீவன்முத்தரை யல்லாமல் வேறி யாவரறிய வல்லுநர்.

(வி - ம்.) வினை - தொழில். கும்பியூடும் என்றவும்மை இறந்தது தழீஇய வெச்சவும்மை.

(90)

 வழிநின்று நன்று புரிகால தன்றன் வழிபோலு டற்று பயனும்
 குழிநிற்ப வுய்த்தி கொடுமைத்தி றங்கள் குயில்கால வற்றின் வழிபோற்
 பழியற்று ணர்த்து பயனும்பு ணர்த்தி பயனொன்று றாத திறமும்
 தழிநிற்றி நின்னை யருளாகி நின்ற தவரன்றி யாவ ரறிவார்.

(இ - ள்.) நூனெறியிலே நிலைபெற்றுப் புண்ணியங்களைச் செய்யும்போழ்து அப்புண்ணியப் பயன்போலவே வருத்துதற்கேதுவாகிய தீவினையின் பயன்களும் குழுமிநிற்கும் வண்ணம் சேர்க்கின்றாய். தீவினையின் வகைகளைச் செய்யும்போழ்து அத்தீவினையின் பயன்கள் போலவே, தன் மாட்டொரு பழியுமின்றாக நூல்களானுணர்த்தப்படும் இன்பப் பயனையுஞ் சேர்க்கின்றாய். இன்பதுன்பமாகிய இருவகைப் பயனுமெய்தாத வினைக்கூறுகளையுந் தழுவுவித்து நிற்கின்றாய். நின்னை நின்மல துரியாதீதத்தின்கண் ஏகனாகி யிறைபணி நின்ற சீவன் முத்தரன்றி யாவரறிய வல்லுநர்.

(வி - ம்.) வழி - நூனெறி. நன்று - புண்ணியம். அதன்றன் வழி போல் - அப்புண்ணியப் பயன்போல. உடற்றுபயன் - துன்புறுத்துகின்ற தீவினைப்பயன். குழுவி நிற்பவென்பது விகாரம். கொடுமைத் திறங்கள் - தீவினையின் வகைகள், குயில்கால் - செய்யுமிடத்து. அவற்றின் வழிபோல் - அத்தீவினைகளின் பயன்போல. பழியற்று - தன்னிடத்துப் பழியின்றாக. பழியற்று எச்சத்திரிபு. உணர்த்துபயன் - நூல்களா னுணர்த்தப்படு மின்பப் பயன். பயனொன்றுறாத்திறம் - இன்பத்துன்பமாகிய இருவகைப்பயனு மெய்தாத வினைப்பகுதிகள். தழுவியென்பது விகாரம். இச்செய்யுளில் "புண்ணியம் பாதகமாகப் போற்றிய" என்னுஞ் செய்யுளின் கருத்தமைந்திருத்தல் காண்க.

(91)

 நாளுற்றெ ழுந்த மதிபோன்ம லங்க ணலியத்து ரந்து வருதி
 வாளுற்ற செய்ய சுடர்போல முற்று மடியக்கி ளர்ந்து நிமிர்தி
 ஆளத்த விர்ந்த திருமேனி தன்னை யழலம்பி ழம்பி னறியத்
 தாளுய்த்தி நின்னை யருளாகி நின்ற தவரன்றி யாவ ரறிவார்.

(இ - ள்.) முதனாண் முதலாகப் பொருந்தித் தோன்றுகின்ற முற்பக்கத்துத் திங்கள்போல மலங்களை யவற்றின் சத்தி தேயும் வண்ணம்