பக்கம் எண் :

பிரமன் சிருட்டி பெறு படலம்315

(இ - ள்.) எவ்வகைப்பட்ட பெரிய நூலுணர்ச்சியையுடைய பெரியாராயினும் (ஒரு தொழின் முயற்சியின்கண்ணது கைகூடாது) எவ்வகைப்பட்ட பெரிய துன்பினை யனுபவித்த காலத்தும் அவ்வகைப்பட்ட பெரிய துன்பினை மீட்டுமுளவாக்கும் அத்தன்மைத்தாகிய தொழிலின்கண் மனமொழி மெய்கள் கலத்தலல்லாமல் ஒப்பற்ற இறைவன் மெய்யருளாகிய இன்பக்கடலின்கண் மூழ்குகின்ற மார்க்கத்தைச் சிறிதும் நினையார். ஆதலால் தாமரை மலரின்கண்ணுள்ள பிரமன் ஒப்பற்ற துன்பத்தினைப் பலகாலம் அநுபவித்தும் (முன்னிழந்த) படைத்தற் றொழிலினையே மீட்டனன்.

(வி - ம்.) தன்னமும் - சிறிதும். பப்பு - ஒப்பு. இதனைப் "பப்பென்ப பரப்போ டொப்பாம்" என்னும் நிகண்டானும், "பப்பற வீட்டினிலிருந்து நின்னடியார்" என்னும் மணிவாசகர் திருவாக்கானுமறிக. இது வேற்றுப்பொருள்
வைப்பணி.

(102)

 விண்ண வர்க்கவியி னின்பம்வி ளைத்து
           மேதி னிக்குமுறை யாவும்வி ளைத்தும்
 கண்ணு தற்பர னடித்துணை நாளுங்
           காத லன்புவளர் பூசைவி ளைத்தும்
 எண்ண மிக்கமுனி வீரய னோற்றங்
           கெய்த ருந்தொழின்மை பெற்றமை சொற்றாம்
 அண்ண னந்திதவ மாற்றுபு செவ்வே
           ளருள்கி டைத்தவுயர் காதைதெ ரிப்பாம்.

(இ - ள்.) விண்ணுலகத்தின்கணுள்ள தேவர்களுக்கு (யாகத்திலிடும்) அவியாகிய இன்பினையுளவாக்கிப் பூமியின்கண்ணுள்ள ஆன்மாக்களுக்கு ஓழுக்கமெல்லாவற்றையு முளவாக்கி, நெற்றியிற் கண்ணினை யுடைய இறைவனடித் துணையின்கண் அயராவன்பு வளர்தற்கேதுவாகிய பூசனையைச் செய்து மக்களெண்ணங்களின் உயர்ந்து விளங்குகின்ற முனிவர்களே! பிரமன் தவத்தினைச் செய்து அவ்விடத்துப்பிற ரடைதற்கரிய படைப்புத் தொழிலின் றன்மையைப் பெற்றமையைக் கூறினாம். இனிப் பெருமை பொருந்திய நந்தியெம்பெருமான் தவத்தினைச் செய்து செவ்வேளின் அருளினை யடைந்த கதையினைச் சொல்வாம்.

(103)

பிரமன் சிருட்டிபெறு படலம் முற்றிற்று.

ஆகத் திருவிருத்தம்

718