பக்கம் எண் :

318தணிகைப் புராணம்

 முப்பொருளி லக்கணமு முப்பொருளி னொன்றாச்
 செப்புநின தின்னருள்செ றிந்தடியி னொன்றாம்
 அப்பெரிய முத்தியெனு மாரமிர்த வாரி
 எப்பொழுது மூழ்குவது மெய்தலில னெந்தாய்.

(இ - ள்.) எந்தந்தையே பதி, பசு, பாசமென்னு முப்பொருள்களின் இலக்கணத்தினையும் அம்முப்பொருள்களுள் வைத்தொன்றாக வேதாகமங்கள் கூறும். பெருமானின் இனிய அருள்செறிந்த திருவடியின்கண்ணிரண்டறக் கலக்கின்ற அப்பெரிய முத்தியென்னும் நிறைந்த அமிர்த வெள்ளத்தின்கண் மூழ்குவதுமாகிய இவ்விரண்டினையும் அடியே னடையவில்லை.

(வி - ம்.) இலக்கணமும், மூழ்குவதுமாகிய இரண்டினையு மடியேனடைய முடியவில்லையென முடிக்க. செப்புமென்னும் பெயரெச்சம் நின்னென்னும் பெயர்கொண்டு முடிந்தது. வாரி - வெள்ளம், கடலுமாம்.

(5)

 அன்னவை தெரித்ததின ழுத்திவிடல் வேண்டும்
 தன்னிகரி லாநிமல சங்கரச யம்பு
 கன்னியொரு பாககரு ணைப்புணரி யென்னாப்
 பின்னரும்வ ணங்கிமுழு வற்கடல்பெ ருத்தான்.

(இ - ள்.) தனக்கொப்பில்லாத மலமற்றவனே! ஆன்மாக்களுக் கின்பத்தைக் கொடுப்பவனே! சுயம்பாயுள்ளவனே! உமாதேவியை யொருபாகத் துடையவனே! அருட்கடலே! அவைகளி னிலக்கணங்களைத் தெரிவித்து அவ்விரண்டனுள் முத்தியினிடத்து அடியேனை மூழ்கச்செய்ய வேண்டுமென்று கூறிப் பின்னரும் வணங்குதல் செய்து எழுமையுந்தொடர்ந்த அன்பாகிய கடல் பெருகப்
பெற்றான்.

(வி - ம்.) உழுவல் - எழுமையுந்தொடர்ந்தவன்பு. உழுவக்கடலெனவும் பாடம்.

(6)

 திருகுமிரு வல்வினைதி ருந்துபரி பாகம்
 மருவுதலு றுத்திமெய்வ ழங்குமொரு வள்ளல்
 கருணைநனி பொங்கியதெ னக்கதிர்கி ளர்ப்பக்
 குருநகையி னந்திமகிழ் கொள்ளவருள் விள்ளும்.

(இ - ள்.) ஒன்றினோடொன்று மாறுபடுகின்ற நல்வினை தீவினையாகிய வலியவினைகளின் சமமும், திருந்துதற்கேதுவாகிய மலபரிபாகமும் ஆன்மாக்களிடத்துப் பொருந்தும்வண்ணஞ் செய்து சொரூப நிலையை யளிக்கும் ஒப்பற்ற வள்ளலாகிய சிவபெருமான் உள்ளே நிலவிய கருணையானது பொங்கி (வெளிப்பட்டதென்று) சொல்ல ஒளிவெளிப்பட நிறத்தோடுகூடிய சிறு நகையினால் நந்தியெங்குரவன் மகிழ்வுற அருளோடு திருவாய்மலர்ந்தருளுவான்.

(வி - ம்.) தீவினையேயன்றி நல்வினையும் வீடெய்தற்குப் பொன் விலங்குபோலத் தடைசெய்து நிற்றலின் "திருகுமிருவல்வினை" யென்றார். இதனை "இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு" என்னுந் திருக்குறளானறிக. மெய்வழங்கல் -