பக்கம் எண் :

நந்தி யுபதேசப் படலம்329

(இ - ள்.) ஆயிரத்தெட்டண்டங்களையுந் தாங்குகின்ற சூரனுக்குப் பயந்து அவ்வப்புவனங்களிற்றங்கிய வச்சிரப்படையையுடைய இந்திரர்கள் யாவரும் வேற்று வடிவினையெடுத்து அடைந்து எல்லாவுலகங்களினும் பரந்தபுகழையுடைய முருகக்கடவுளின் பாதங்களை வணங்கித் துன்பநீங்கி ஒலிப்பனபோலக் காயினையும் இலையினையுமுடைய சோலையின்கண் உடலின்கட் கண் பொருந்திய களிப்பினையுடைய மயில்கள் ஆடுவனவற்றைக் கண்ணுற்றான்.

(வி - ம்.) அவுணனுக்கு: வேற்றுமை மயக்கம். குலிசம் - வயிரம். பாயின - பரந்த, இதனைப் "பாயினமேகலை" என்னுந் திருக்கோவையா னுணர்க. அகவுவ - ஆடுவன, "கரைநின்றாலு மொருமயிறனக்கு" என்னும் மணிமேகலை யடியானுணர்க.

(32)

 கழிமதக் களிறு காருமென் றுளிய கனைகுர லருவிகூ திருந்தேன்
 பொழிமலர் மாலை விரிவமுன் பனியும் வைகறைப் பூப்பபின் பனியும்
 வழிவளர் வேள்வித் தீயிள வேனின் மாதவத் தீமுது வேனில்
 ஒழிவுறு மிருது தொறுமொழி யாத விருதுவே றுஞற்றுவ கண்டான்.

(இ - ள்.) மிக்க மதத்தினையுடைய யானைகள் கார்காலமாகவும், ஒலிக்கின்ற குரலினையுடைய அருவிநீர் கூதிர்காலமெனவும், தேனைப் பொழிகின்ற மலர்கள் மாலைக்காலத்து மலர்வன முன்பனிக்காலமாகவும், விடியற்காலத்து மலர்வனவாகிய மலர்கள் பின்பனிக் காலமாகவும், வேதங்களிற் கூறிய முறைப்படி வளர்க்கின்ற வேள்வியின் கண்ணுள்ள தீ இளவேனிற் காலமாகவும் (தவஞ்செய்யுமிடத்துண்டாகிய) பெரிய தவத்தீயாகிய பஞ்சாக்கினி முதுவேனிற் காலமாகவும், நீங்கிய பருவங்கடோறும் நீங்காத வேறாகிய பருவத்தினை இவ்வாறு செய்வனவற்றைக்
கண்டான்.

(வி - ம்.) வெண்மலர்கள் மாலையினும், வைகறையினும் விரிதலின் அக்காலங்களி னிகழ்பொருளின் குணங்களைக் காலத்தின் மேலேற்றி "முன்பனி, பின்பனி" என்றார். தவாக்கினி வேள்வித் தீயினுமிக்கெரிதலின் "முதுவேனி" லென்றார். அருவி வீழ்தலின் பிசிர்கள் பரந்து காற்றுடன் சென்று மாவும் மாக்களையும் குளிரும் வண்ணஞ் செய்தலின் 'கூதிர்க்கால'மென்றார். யானைகள் கருநிறத்தோடு கூட்டங் கூட்டமாய்ச் சேறலின் அச்செயல் மேகவெழுச்சி போறலின் 'கழிமதக்களிறு காரும்' என்றார். கழிமிகுதி. வைகறை - விடியற்காலம். இருது - பருவம்.

(33)

 தெங்கினொண் பாளை வானர மிதிப்பத்
           தீங்கனி துடுமென வீழ்ந்த
 பொங்குநீர்ச் சுனையின் புடையுளர் தோகை
           பொள்ளென வெரீஇமுழைச் சேப்ப
 அங்கண்வா ளரவங் கமுகின்மேற் றாவ
           வதன்தலைத் தவழ்சுட ரஞ்சித்
 துங்கவன் கோயிற் கொடித்தலை மஞ்ஞைத்
           துணையடி தாழ்வது கண்டான்.