பக்கம் எண் :

330தணிகைப் புராணம்

(இ - ள்.) தெங்கின் ஒளிபொருந்திய பாளையினைக் குரங்குகள் மிதிக்க, இனிமை பொருந்திய தெங்கம் பழங்கள் துடுமென்னுமொலியுடன் வீழப்பெற்ற நீர்மிகுந்த நீர்ச்சுனையின் பக்கத்தே இறகை உளர்கிற மயில்கள் விரைவாக அச்சமுற்றுப் பக்கலிலுள்ள குகையின்கட்டங்க அக்குகையின்கண் வாழ்கின்ற பாம்பு கமுகமரத்தின்மேற் றாவக் கமுகினுச்சியி னூர்கின்ற சூரியன் பயமுற்று யாவரினு முயர்ந்தவனாகிய முருகப்பெருமான் திருக்கோவிலின் வாய்தலிலுள்ள கொடியின்கட்டங்கிய மயிலினிரண்டடிகளினும் வணங்குவதைக் கண்டான்.

(வி - ம்.) உளர்தோகை - இறகை மூக்காற்கிண்டுமயில், இதனை "பைந்துகின், மகளிர் தேன்சோர் பவளவாய் திகழ நாணிச் - சிந்தித்துக் கூந்தல் வாங்கிச் செவ்வணந் துடைப்ப தேபோல் - இந்திர கோபங்கௌவி யிறகுளர் கின்ற மஞ்ஞை - யந்தரத் திவர்ந்த பாய்மா வரும் பொற்றா ரரவத் தாலே" என்னுஞ் சிந்தாமணி (கனகமா - 263.) செய்யுளா னறிக.

(34)

 பொறிபடு துறுக லெனநினைந் துறங்கும் புலிவெரிந் தலைநெறு நெறென
 எறிசுடர்க் குவட்டின் முசுவிலங் கித்திட் டெழுந்துயர் சோலையை வாவக்
 கறிவளர் சரா லுழுவைகண் மலர்த்துக் கதுமென வெதிர்நிலைக் குவடு
 முறிபடத் தாக்கி முதிர்சினங் கடவி முழங்குபு வெள்குவ கண்டான்.

(இ - ள்.) உறங்குகின்ற புலியின் முதுகினைப் புள்ளிகள் பொருந்திய குண்டுக்கல்லென நினைத்து (மிதித்தலால்) நெறுநெறென்று ஒலி செய்யக் குரங்கு (பயந்து) ஒளிவீசுகின்ற சிகரத்தினின்றும் விலகியெழுந்து உயர்ந்த சோலையினிடத்துத் தாவிச்செல்ல மிளகுக்கொடி வளர்கின்ற மலைச்சாரலின் கண்ணுள்ள புலி கண்ணைத்திறந்து விரைவாக எதிரே நிலைத்திருக்கின்ற சிகரத்தைத் (தன்னினமாகிய புலியெனக் கருதி) முறிபடாநிற்க மோதி மிக்க சினத்தைச் செலுத்தி முழக்கஞ்செய்து (அக்குவடு புலியன்மையறிந்து) நாணமடைவனவற்றைக் கண்ணுற்றான்.

(வி - ம்.) பொறி - புள்ளி. துறுகல் - குண்டுக்கல். வெரிந் - முதுகு. விலங்கித்திட்டு - விலகி. கறி - மிளகு, உழுவை - புலி. கண்மலர்த்து - கண்ணை விழித்து. எதிரே நிற்குங் குவட்டைத் தன்னினமான புலியெனக் கருதிப் புலியன்மை யறிந்ததனால் வெள்குவ வென்றார்.

(35)

 காலணி சிலம்பிற் காய்க்கும்வெட் பாலை சாலெனக் காய்படுங் கோங்கம்
 வாலறு மணிலிற் காய்கஞ லிலவும் வேலியின் வாங்கடி வரைதக்
 கோலமுந் தீம்பூ மரங்கருப் பூரங் குங்கும மிலவங்கங் கோட்டம்
 ஏலமும் விடுக்கு முருகெதிர் கொள்ள வெழில்வளங் கண்டுகண் டடுத்தான்.

(இ - ள்.) காலின்கண் ணணிந்த சிலம்புபோலக் காய்க்கும் வெட்பாலை மரமும், மிடாப்போலக் காய்பொருந்துங் கோங்கமரமும், வாலற்ற அணில்போலக் காய்கள் பொருந்திய இலவமரமும் வேலிகளின்கண்ணே தாவிப்படர்கின்ற தக்கோலமரமும், தீம்பூமரமும். கருப்புரமரமும் குங்குமமரமும், இலவங்கமரமும், கோட்டமும், ஏலச்செடியுமாகிய இவைகள் விடுக்கின்ற வாசனைகள் எதிர்கொள்ளாநிற்க, அழகிய வளங்களைக் கண்ணுற்றுக் கண்ணுற்றடைந்தான்.